பொறியியல் மாணவர் சேர்க்கை தொடர்பாக போலியான தொலைபேசி அழைப்புகளை நம்ப வேண்டாம்: தொழில்நுட்ப கல்வி ஆணையர் வேண்டுகோள்


சென்னை: பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களை ஒற்றைச்சாளர முறையில் நிரப்புவதற்கான இணையவழி கலந்தாய்வு தற்போது நடைபெற்று வருகிறது. முதல் சுற்று முடிவடைந்து அதில் கல்லூரியை தேர்வு செய்த மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டு இப்போது 2-வது சுற்று கலந்தாய்வு சென்றுகொண்டிருக்கிறது.

இந்நிலையில், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் பெயர் மற்றும் அவர்களின் செல்போன் விவரங்கள் சமூகவலைத்தளத்தில் நேற்று வெளியானது. பொறியியல் சேர்க்கைக்காக கொடுத்திருந்த தகவல்கள் இவ்வாறு பொதுவெளியில் வெளியானதால் மாணவர்களும் பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர். அதோடு குறிப்பிட்ட பொறியியல் கல்லூரியை தேர்வு செய்யுமாறும் ஏராளமான மாணவர்களின் தொலைபேசி எண்களுக்கு அழைப்புகளும் வந்த வண்ணம் உள்ளன.

மாணவர்களின் தரவரிசை விவரங்களுடன் செல்போன் எண்கள் வெளியான விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்கும் வகையில் மாநில தொழில்நுட்பக் கல்வி ஆணையரும், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை தலைவருமான டி.ஆபிரகாம் நேற்று ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: நடப்பு கல்வி ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு தரவரிசை பட்டியல் ஜூலை 10-ம் தேதி வெளியிடப்பட்டது. தரவரிசை பட்டியல் வெளிப்படைத்தன்மையுடன் அனைவரும் அறிந்து கொள்ளும் வண்ணம் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைஅதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.tneaonlineorg) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதில் மாணவர்களின் விண்ணப்ப எண்,பெயர், பிறந்த தேதி, மதிப்பெண்,இட ஒதுக்கீட்டுப் பிரிவு தரவரிசை எண் ஆகிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அதில் மாணவர்களின் தொலைபேசி எண்ணோ மற்றும் மாவட்ட விவரமோ எந்த இடத்திலும் தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் மாணவர்களின் நலனுக்காக கொடுக்கப்பட்ட தரவரிசை தகவல்களை சில சமூகவிஷமிகள் தங்களின் சுயநலத்துக்காக தவறான தொலைபேசி எண் மற்றும் தவறான மாவட்ட விவரங்களைக் கொண்டு மாற்றி அமைத்து வெளியிட்டிருப்பது தெரிய வருகிறது. இது தொடர்பாகசைபர் கிரைம் துறைக்கு புகார் அளிக்கப்பட்டு தரவுகளை தவறாககையாண்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் சேர்க்கை தொடர்பான அங்கீகரிக்கப்படாத தொலைபேசி அழைப்புகளை நம்ப வேண்டாம். மேலும், தங்கள் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டையும் யாரிடமும் பகிரவேண்டாம். ஏதேனும் சந்தேகங்கள் எழும்பட்சத்தில் அருகில் உள்ள டிஎப்சி தகவல் மையத்தை தொடர்பு கொண்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

x