பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பமாட்டோம்... அந்த டீச்சர் தான் வேணும்... நெகிழ வைத்த போராட்டம்!


பள்ளி மாணவர்கள் போராட்டம்

புதுச்சேரி வில்லியனூர் கொம்யூன் உசுடு தொகுதிக்குட்பட்ட அகரம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் அனிதா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரியில் உள்ள வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டார்.

இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பள்ளி மாணவர்கள், ஆசிரியை அனிதாவின் பணியிட மாற்றத்தினை ரத்து செய்து மீண்டும் இப்பள்ளியிலேயே பணி அமர்த்த வேண்டும் என வலியுறுத்தி வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் போலீஸார்

அவர்களுடன் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்களும் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், உடனடியாக அவரை மீண்டும் இதே பள்ளியில் பணியமர்த்தப்படவில்லை என்றால் ஓட்டு மொத்தமாக இப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களின் டி.சியை பெற்று வேறு பள்ளிக்குச் செல்வோம் என கூறி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

வெறிச்சோடிய பள்ளி வளாகம்

தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், ஆசிரியை அனிதாவை மீண்டும் இதே பள்ளிக்கு மாற்றப்படும் வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் எனக்கூறி, மாணவர்களை பெற்றோர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். இதனால், பள்ளி வளாகம் மாணவர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது. தொடக்கப்பள்ளி ஆசிரியைக்காக மாணவர்கள் வீதியில் இறங்கி போராடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

யூடியூப் சேனலை மூடிவிட்டு, பைக்கை எரிச்சுடுங்க... டிடிஎஃப் வாசனிடம் ஆவேசமான நீதிபதி!

x