பல்கலைக்கழக செயல்பாடுகள் குறித்து துணைவேந்தர்களுடன் அமைச்சர் ஆலோசனை


சென்னை: பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் தொடர்பாக துணைவேந்தர்களுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி முக்கிய ஆலோசனை நடத்தினார்.

பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசனை கூட்டம் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் சென்னையில் உள்ள மாநில உயர்கல்வி கவுன்சில் அரங்கில் நேற்று நடைபெற்றது. உயர்கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவ்முன்னிலை வகித்தார்.

இதில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.ஆறுமுகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம், திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார்பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக துணைவேந்தர் கலா, வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம் உட்பட 9 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கலந்துகொண்டனர். சென்னை பல்கலைக்கழகம் உட்பட துணைவேந்தர்கள் இல்லாத 4 பல்கலைக்கழங்களின் சார்பில் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள் மற்றும் பதிவாளர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது பல்கலைக்கழகங்களில் நிலவும் நிதி பற்றாக்குறைபிரச்சினையை, துணைவேந்தர்கள் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து பேசிய அமைச்சர், "அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே தேர்வு கால அட்டவணையை பின்பற்றி ஒரேநேரத்தில் தேர்வுமுடிவுகளை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வித்தரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மாநில உயர்கல்வி கவுன்சில் அளித்துள்ள பாடத்திட்டத்தை அனைத்து கல்லூரிகளிலும் செயல்படுத்த வேண்டும். நிதிபிரச்சினை தொடர்பாக துணைவேந்தர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்" என்றார்

x