சென்னை: முதுநிலை நீட் தேர்வுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகளில் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு ஆந்திரா போன்ற மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிப்பதாக என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இளநிலை நீட் ஊழல் அம்பலமான பின்னணியில், கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடைபெற இருந்த முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு திடீரென தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இப்போது, ஆகஸ்ட் 11 அன்று நீட் முதுநிலை தேர்வு இரண்டு ஷிப்ட்களாக நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்த தேர்வர்களுக்கு ஆந்திரா போன்ற மாநிலங்களில் எங்கோ ஒரு இடத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கடைசி நேரத்தில் ரயில் டிக்கெட் கிடைக்காமல் பல ஆயிரங்கள் செலவு செய்து விமானத்தில் செல்ல வேண்டிய நெருக்கடியையும், தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கடைசி நேர மன உளைச்சலையும் இந்த முடிவு மாணவர்களுக்கு உருவாக்குகிறது.
மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, குளறுபடிக்கு முடிவுகட்டுவதுடன், தேர்வு மைய அலைக்களிப்பை தடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்’ என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்