தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் பல்கலை.யில் முதுநிலை மருத்துவ இதழியல் பட்டயப்படிப்பு: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு


சென்னை: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை மருத்துவ இதழியல் பட்டயப்படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் ஜூன் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துப் பல்கலைக்கழகத்தின் நோய்ப் பரவியல் (எபிடமாலஜி) துறையின் கீழ் முதுநிலை மருத்துவ இதழியல் பட்டயப்படிப்பு பயிற்றுவிக்கப்படுகிறது. இரு வருடம் கொண்ட இந்த படிப்புக்கு 8 இடங்கள் உள்ளன.

ஏதேனும் ஓர் இளநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்கள் இப்படிப்பில் சேரலாம். மொத்தம் 3 தாள்களுக்கான தேர்வு முறையில், அடிப்படை சுகாதாரம், நோய்களின் தாக்கம், பொது சுகாதாரம் குறித்த விவரங்கள், மருத்துவம் சார் சட்டங்கள், மருத்துவக் குற்றங்கள், மருந்தியல், ஊட்டச் சத்து குறைபாடுகள், ஆயுஷ் பாரம்பரிய மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பாடங்கள் இடம்பெற்றுள்ளன.

இப்படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கும், கூடுதல் விவரங்களுக்கும் www.tnmgrmu.ac.in என்ற இணையதள முகவரியிலோ, epid@tnmgrmu.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 044-22200713 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இப்படிப்பில் தினந்தோறும் வகுப்புகள் கிடையாது.

இணையவழி வகுப்புகள் வாரம் ஒரு முறையும், நேரடி வகுப்புகள் மாதம் ஒரு முறையும் நடத்தப்படும். முதுநிலை மருத்துவ இதழியல் படிப்புக்கான ஓராண்டு கல்வி கட்டணம் ரூ.7 ஆயிரமாகும். தேர்வுக் கட்டணங்கள் இதில் அடங்காது. இந்த படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x