பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு ஆக. 1 முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்


சென்னை: இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி முதல் அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படும் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

சென்ற கல்வி ஆண்டுக்கான (2023-2024) பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்டது. அத்தேர்வை 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினர். தேர்வு முடிவுகள் மே 6-ம் தேதி வெளியிடப்பட்டன. தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மேற்படிப்புக்கு உடனடியாக விண்ணப்பிக்க வசதியாக மே 9-ம் தேதி தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிலையில், அவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் ஆகஸ்ட் 1-ம் தேதி வழங்கப்படும் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் ந.லதா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களுக்கு (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உட்பட) அசல் மதிப்பெண் சான்றிதழ் ஆகஸ்ட் 1-ம் தேதி (வியாழக்கிழமை) முதல் வழங்கப்படும். பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியிலும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்திலும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம். இதுதொடர்பாக கூடுதல் விவரங்களை அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) அறிந்துகொள்ளலாம்

x