மாதம் ரூ.750 உதவி தொகையுடன் மின்சார வாகன மெக்கானிக் பயிற்சி - வடசென்னை ஐடிஐ-யில் நேரடி சேர்க்கை


பிரதிநிதித்துவப் படம்

சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடசென்னை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) சிவில் இன்ஜினீயரிங் அசிஸ்டென்ட், டிராப்ட்ஸ்மேன் சிவில் மற்றும் மெக்கானிக்கல், டர்னர், மெஷினிஸ்ட், லிப்ட் மெக்கானிக், பிட்டர், ஏசி மெக்கானிக் ஆகிய 2 ஆண்டுகால தொழிற்பயிற்சிகளும், இண்டீரியர் டிசைன் அண்ட் டெக்கரேஷன், வெல்டர், பிளம்பர் ஆகிய ஓராண்டு கால தொழிற்பயிற்சிகளும், 6 மாத கால டிரோன் பைலட் பயிற்சியும் வழங்கப்படுகின்றன.

இப்படிப்புகளில், 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்தவர்கள், டிப்ளமோ படித்தவர்கள், பட்டதாரிகள் சேரலாம். நடப்பு கல்வி ஆண்டில் மேற்கண்ட படிப்புகளுக்கான நேரடி மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது.

மேலும், டாட்டா டெக்னாலஜி நிறுவனத்துடன் இணைந்து உயர் தொழில் நுட்பத்துடன் கூடிய ஓராண்டு மற்றும் இரண்டாண்டு கால தொழிற் பயிற்சிகளுக்கும் சேர்க்கை நடைபெறுகிறது. இதில், இண்டஸ்ட்ரியல் ரோபோட்டிக்ஸ் அண்ட் டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னீசியன் என்ற ஓராண்டு கால படிப்பும், மெக்கானிக் எலெக்ட்ரிக் வெகிக்கில், பேசிக் டிசைனர் அண்ட் விர்ச்சுவல் வெரிபயர் (மெக்கானிக்கல்), அட்வான்ஸ்டு சிஎன்சி மேனுபேக்சரிங் டெக்னீசியன் ஆகிய 2 ஆண்டுகால படிப்புகளில் சேரலாம்.

மேற்குறிப்பிட்ட தொழிற்பயிற்சிகளில் சேருவோருக்கு மாதம் ரூ.750 உதவித்தொகை, இலவச பாடப்புத்தகங்கள், வரை படக்கருவி, 2 செட் சீருடைகள், பஸ் பாஸ், ஷூ ஆகியவை வழங்கப்படும். பயிற்சி நிலையத்தில் விடுதி வசதி உள்ளது. பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது. படித்து முடித்தவுடன் வளாக நேர்காணல் நடத்தி தொழில் நிறுவனங்களில் 100 சதவீத வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும்.

பயிற்சியில் சேர விரும்புவோர் ஜூலை 31-ம் தேதிக்குள் வட சென்னை மின்ட் பகுதியில் உள்ள அரசினர் ஐடிஐ-க்கு நேரில் வந்து சேர்க்கை பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு 044-25209268 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

x