பெற்றோரை மிரட்டும் ‘பைஜூஸ்’: சாட்டை சுழற்றும் குழந்தை உரிமைகள் ஆணையம்


பள்ளியில் பயிலும் குழந்தைகளை தங்கள் நிறுவனத்தின் ஆன்லைன் பயிற்சியில் சேர்க்குமாறு, அவர்களின் பெற்றோருக்கு மிரட்டல் விடுப்பதாக 'பைஜூஸ்' நிறுவனத்தின் மீது புகார்கள் எழுந்துள்ளன. அவற்றின் அடிப்படையில் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், பைஜூஸ் நிறுவனத்தின் தலைவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது.

கரோனா காலத்தில் பல்வேறு துறைகள் முடங்கி போயின. அவற்றின் மத்தியில் கரோனா ஆதாயத்தில் ஒரு சில துறைகள் பிரமாண்டமாய் வளரவும் செய்தன. ஆன்லைன் கல்விக்கான பயிற்சி நிறுவனங்கள் அவற்றில் முக்கியமானவை. பள்ளிகள் அனைத்தும் ஆன்லைனில் இயங்கியதில், கற்றல் கற்பித்தலில் தொய்வு ஏற்பட்டதாக கலங்கிய பெற்றோர்கள் இந்த நிறுவனங்களின் தூண்டில் வலிய விழுந்தனர். பெற்றோர்களை தொடர்பு கொள்ளும் பயிற்சி நிறுவனங்கள், ஆன்லைன் வாயிலாகவே மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவதாக நம்பிக்கையூட்டின.

இந்தவகையில் பைஜூஸ் என்ற ஆன்லைன் பயிற்சி நிறுவனம் செயலி மற்றும் வலைதளம் வாயிலாக பயிற்சி அளிப்பதாக கூறி, கரோனா காலத்தில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் பரந்து வளர்ந்தது. ஆனால் இந்த நிறுவனங்களின் கட்டண விகிதம், பயிற்சி அளிக்கும் விதம், பெற்றோரை நெருக்கியது ஆகியவை தொடர்பாக புகார்களும் எழுந்தன. அப்போது ஆன்லைன் கல்விக்கு தேவை அதிகமாக இருந்ததால், பைஜூஸ்-க்கு எதிரான புகார்கள் பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை.

தற்போது பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதில் ஆன்லைன் பயிற்சி நிறுவனங்களுக்கு தேவை குறைந்தது. இழப்பை ஈடுகட்ட பைஜூஸ் போன்ற நிறுவனங்கள் விநோத நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கின. அவை தொடர்பான புகார்களே தற்போது தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கதவை தட்டியிருக்கின்றன. இந்த புகார்களின் அடிப்படையில் ஆணையத்தின் தலைவரான பிரியங் கானூங்கோ, பைஜூஸ் நிறுவனத்துக்கு சம்மன் அனுப்பியுள்ளார். மேலும் டிச.23 அன்று ஆணையத்தின் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறும், பைஜூஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரவீந்திரனுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பெற்றோர்களின் தொலைபேசி எண்களை முறைகேடான வகையில், அதற்கான தரகர்கள் வாயிலாக விலைக்கு வாங்குவதில் பைஜூஸ் நிறுவனத்தின் அத்துமீறல் தொடங்குகிறது. அந்த பெற்றோர்களின் பின்னணியை அலசி ஆராயும் பைஜூஸ் நிறுவன பிரதிநிதிகள், முதல் தலைமுறையாக பள்ளிக்குச் செல்லும் குடும்பங்களாக பார்த்து குறிவைக்கிறார்கள். பொது விபரங்கள் அதிகம் அறியாத அந்த பெற்றோரை முதலில் நைச்சியமாகவும், பிடிகொடுக்காதோருக்கு சற்று மிரட்டல் விடுத்தும் ஆன்லைன் பயிற்சியில் சேர வைக்கிறார்கள். அதன் பிறகான கட்டணங்கள், பயிற்சி நடைமுறைகள் ஆகியவற்றிலும் பைஜூஸ் செய்யும் தகிடுதத்தங்கள் புகாராக எழுந்துள்ளன.

இவற்றை ஒவ்வொன்றாக அடுக்கியுள்ள பிரியங் கானூங்கோ, பைஜூஸ் நிறுவனத்தின் ஆவணங்கள் பலவற்றையும் ஆராய வேண்டியுள்ளதால், விசாரணையில் அவற்றையும் சமர்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணை நடைமுறைகள் அனைத்தும் ஆணையத்தின் ’2005-ம் ஆண்டு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின் 14வது பிரிவின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

கரோனா காலத்தில் செழித்து வளர்ந்த பைஜூஸ் நிறுவனம், பள்ளிகள் நேரடி வகுப்புகளுக்கு மாறியதில் அடிவாங்கியது. இதனால் 5% ஊழியர்களை பணி நீக்கம் செய்ததில் 2 மாதங்களுக்கு முன்னர் சர்ச்சைக்கும் ஆளானது. தற்போது தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தால் புதிய சிக்கலில் ஆழ்ந்துள்ளது.

x