கோவை: தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இயக்குநர், கூடுதல் தலைமைச் செயலாளர் சி.உமா சங்கர் கோவையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு அரசு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மூலமாக தொழில் முனைவோராக விரும்பும் பட்டதாரிகளை ஊக்குவிக்கும் வகையில், ஓராண்டு தொழில் முனைவோருக்கான பட்டயப் படிப்பு வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சென்னை இ.டி.ஐ.ஐ தலைமையகத்தில் உள்ள கட்டிடத்தில் ஆண்டுதோறும் 500 பேருக்கு பயிற்சி வழங்க, ரூ.1 லட்சம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து வகுப்பறைகளும் குளிர்சாதன வசதி கொண்டுள்ளன.
அனைத்து அறைகளும் வீடியோ கான்பரன்ஸ் நடத்துவதற்கான உலகத்தரம் வாய்ந்த முறையில் கட்டப்பட்டுள்ளன. இந்தப் பட்டய படிப்பின் போது அனைத்து மாணவர்களும் தொழில் முனைவுக்கான அத்தனை பயிற்சிகளையும் பெறலாம். ஏதேனும் ஓர் இளங்கலை கல்வியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 30 வயதுக்குள் இருக்கவேண்டும். தொழில்முனைவோராக விரும்புவோருக்கு தேவையான தொழில் சார்ந்த அறிவை பெற உதவும் வகையில் இப்பயிற்சி உருவாக்கப்பட்டுள்ளது.
ஓராண்டு பட்டயப்படிப்பில் பங்கு பெற விரும்பும் ஆர்வமுள்ள மாணவர்கள் இதற்காக நடத்தப்படும் ஆன்லைன் நுழைவுத் தேர்வில் பங்கேற்க வேண்டும். தொடர்ந்து அகமதாபாத் நிறுவனம் நேர்காணல் நடத்தும். இடிஐஐ தமிழ்நாடு நிறுவனத்தின் இணையதளம் வழியாக (www.editn.in) நேரடியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் கிடையாது. பயிற்சி வகுப்பு வரும் ஜூலை 1-ம் தேதி தொடங்கும், என்றார்.