எம்ஐடி கல்லூரி 75-வது ஆண்டு விழா: உலக அரங்கில் அண்ணா பல்கலை.யின் பெயர் ஒளிரும் என துணைவேந்தர் நம்பிக்கை


குரோம்பேட்டை எம்.ஐ.டி. கல்லூரியின் 75-ம் ஆண்டு விழாவில் அண்ணாபல்கலை. துணைவேந்தர் வேல்ராஜ் கலந்து கொண்டார். விழாவில், எம்..ஐ.டி. கல்லுாரி நிறுவனர் ராஜம் தபால் தலை மற்றும் 75-ம் ஆண்டு விழா மலர் வெளியிடப்பட்டது. | படம்: எம்.முத்துகணேஷ் |

குரோம்பேட்டை: உலக அரங்கில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயர் ஒளிரும் என்று துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். குரோம்பேட்டையில் எம்.ஐ.டி. கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரி 1949, ஜூலை 18-ம் தேதி ராஜம் என்பவரால் தொடங்கப்பட்டது. இக்கல்லுாரியின் 75-ம் ஆண்டு விழா இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

2023, ஜூலை மாதம் விழாவை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது அரங்கம் மற்றும் போராசியர்கள் அறை கட்ட ரூ. 75 கோடி ஒதுக்கப்படும் என்று கூறினார். அதன்படி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இக்கல்லூரி மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் போன்ற பல தலைவர்களை உருவாக்கியுள்ளது.

இஸ்ரோவின் வளர்ச்சிக்கு எம்.ஐ.டி. கல்லூரி நிறைய பங்களிப்பு செய்துள்ளது. இக்கல்லூரியின் 75-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு இந்த ஆண்டு சர்வதேச மாநாடு, தேசிய கருத்தரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இந்நிலையில் முன்னாள் கல்லுாரி தலைவர், முன்னாள் துணைவேந்தர்கள், முன்னாள் பேராசிரியர்கள், முன்னாள் ஊழியர்கள் உள்ளிட்டோரை கவுரவிக்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில், கல்லூரி நிறுவனர் ராஜம் தபால் தலை மற்றும் 75-ம் ஆண்டு விழா மலர் வெளியிடப்பட்டன.

இந்த விழாவில் கல்லூரி முன்னாள் முதல்வர்கள், பேராசிரியர்கள், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள், பதிவாளர்கள், அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்ஐடி கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், ஏ.டி.பி.டி. தலைவர் வேலுசாமி, ஜே.எஸ்.டபுள்யு. ஸ்டீல் தலைவர் முருகன், டெல்பி டி.வி.எஸ். தலைமை திட்ட அலுவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மதியம் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மாலை, இன்னிசை கச்சேரி ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.

பின்னர் செய்தியாளர்களிடம் துணைவேந்தர் வேல்ராஜ் கூறியதாவது: உலகத்தில் உள்ள சிறந்த பல்கலைக்கழகத்தில் ஒன்றாக இருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு எம்.ஐ.டி கல்லூரி செய்துள்ள சாதனைகள் அதிகமானது. பல்வேறு துறைகளில் மிகச் சிறந்த பங்களிப்பை எம்.ஐ.டி கல்லூரி அளித்துள்ளது.

இன்று எம்.ஐ.டி நிறுவனர் தினத்தை முன்னிட்டு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. இந்த விழாவில் முன்னாள் துணைவேந்தர்கள், பதிவாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இன்னும், இரண்டு நாட்கள் எம்.ஐ.டி முன்னாள் மாணவர்கள் சேர்ந்து நிகழ்ச்சிகள் நடத்த உள்ளனர். நிறைவு நாள் நிகழ்ச்சியில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கலந்து கொள்கிறார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள 4 முக்கிய கேம்பஸ்களில் எம்.ஐ.டி கல்லூரி முக்கியமானது. அண்ணா பல்கலைக்கழகம் உலக அரங்கிலே 850 ரேங்கிலிருந்து 383 ரேங்க்குக்கு வந்துள்ளது.

இந்தியாவில் ஏழு, ஐ.ஐ.டி.கள் டெல்லி பல்கலைக்கழகத்துக்கு அடுத்து பத்தாவது ரேங்கில் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் இன்னும் 4 வருடத்தில் 50-வது ஆண்டு விழாவை கொண்டாட உள்ளது.

அந்த சமயத்தில் உலக அளவில் 200 ரேங்க்குக்குள் வருவதற்கு எம்.ஐ.டி கல்லூரி உட்பட அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள 4 கேம்பஸ்களில் உள்ள கல்லூரிகளும் பாடுபட வேண்டும். உலக அரங்கில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயர் ஒளிரும் என்றார்.

x