சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.
தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், துணைப் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தனிப்பிரிவு அலுவலர், உதவிப் பிரிவு அலுவலர், வனவர் என 507 குரூப் 2 பணியிடங்கள் மற்றும் மேலாண்மை இயக்குநரின் நேர்முக உதவியாளர், முதுநிலை ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், மேற்பார்வையாளர், இளநிலைக் கண்காணிப்பாளர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1,820 குரூப் 2ஏ பணியிடங்கள் என்று 2,327 இடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குரூப்-2, குரூப்-2ஏ முதல்நிலைத் தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி ஜூன் 20-ம் தேதி வெளியிட்டது.
முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 14-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் தேர்ச்சி பெறுவோருக்கு மெயின் தேர்வு குரூப்-2 பணிகளுக்கு தனியாகவும், அதேபோல், குரூப்-2 ஏ பணிகளுக்கு தனியாகவும் நடத்தப்பட இருக்கிறது. இதுவரை குரூப்-2 பணிகளுக்கு நேர்காணல் இருந்து வந்தது. தற்போது முதல்முறையாக குரூப்-2 ஏ பணிகளைப் போன்று குரூப்-2 பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். இதனால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் https://www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.