1000 பள்ளி ஆசிரியர்களுக்கு ‘தொல்லியல்’ பயிற்சி


கீழடி அகழாய்வு

பள்ளி மாணவர்கள் மத்தியில் மொழி, நிலம், பண்பாடு, நாகரிகம் குறித்த விழுமியங்களை புகட்ட ஏதுவாக, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

பொதுவாக பள்ளி மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள் பலவும் எதிர்காலத்தில் நல்ல பணிக்கு செல்வது, நிறைய பொருள் சேர்ப்பது என்பதையே குறியாகக் கொண்டுள்ளன. இந்த நோக்கிலேயே பெற்றோரின் எதிர்பார்ப்பும் அமைந்து விடுவதால், பள்ளி மாணவர்கள் வெறுமனே மதிப்பெண்களை குவிக்கும் எந்திரங்களாக மாற்றப்படுகிறார்கள். இதனால் பாடங்களை படிப்பது என்பது கருத்துக்களை உட்செரிப்பதாக அல்லாது, மனப்பாடம் செய்வதும் அவற்றை தேர்வுத் தாளில் கொட்டுவதுமாக சுருங்கி விடுகிறது.

வாழ்வின் மதிப்புகளை உணரச் செய்யும் வகையில் நன்னெறி, கலை இலக்கியம், விளையாட்டு ஆகியவற்றை கற்கும் வாய்ப்பும் பள்ளி மாணவர்களுக்கு குறைந்து போகிறது. இதனால் மாணவர்களின் வளரும் போக்கு சிக்கலாகவும் செய்கிறது. படிப்பில் கவனம் சிதறவும் பாதை மாறவும் வாய்ப்பாகிறது. மேலும் மாணவர் தன்னை உணரவும், தான் சார்ந்த மொழி, நிலம், பண்பாடு, நாகரிகம், கலாச்சாரம் உள்ளிட்டவற்றை உள்வாங்கவும் வாய்ப்பு குறைகிறது. இந்த நற்கூறுகளுடன் மாணவ சமுதாயத்தை வளர்த்தெடுக்க முதலில் அவற்றை ஆசிரியர்களிடம் கொண்டுபோய் சேர்த்தாக வேண்டும்.

இந்த நோக்கில் ஆசிரியர்களின் தொல்லியல் அறிவை மேம்படுத்தும் வகையிலும், மாணவர் மத்தியில் அவற்றை கொண்டுபோய் சேர்க்கும் ஏற்பாடாகவும் சுமார் 1000 அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ’தொல்லியல்’ சிறப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது. மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இதற்கான திட்டத்தை வகுத்து, பயிற்சிகளையும் முன்னெடுக்க உள்ளது.

இதன்படி அரசு உயர்நிலை பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு 6 நாள் பயிற்சியாக இவை வழங்கப்பட உள்ளன. பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தாம் பெற்ற கருத்துக்களை கடத்தும் பணியில் இறங்குவார்கள். இதன் மூலம் மாணவர்கள் தங்கள் வாழிடம், அதன் தொன்மை சிறப்புகள், தொல்லியல் சின்னங்கள் ஆகியவற்றை அறிந்துகொள்வார்கள். களப்பயணமாக அவற்றை நேரில் கண்டு அறியவும் வாய்ப்பு பெறுவார்கள்.

பாரம்பரிய தலங்கள், ஆன்மிக சின்னங்கள், தொல்லியல் சிறப்புமிக்க கோட்டைகள், அருங்காட்சியகங்கள் ஆகியவற்றோடு கீழடி அகழாய்வு முதல் அரியலூர் கல்மர எச்சம் வரை அறிந்துகொள்வார்கள். இந்த தொல்லியல் அறிவு மாணவர்கள் தங்கள் வேர்களை அறியவும், பெருமிதம் கொள்ளவும், அவற்றை காக்க உறுதி கொள்ளவும் உதவும். இந்த பெருமிதம் அவர்களின் போக்கிலும் ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும். பள்ளிக் கல்வியில் திமுக அரசின் ஏற்பாடுகளில் ஒன்றாக ’தொன்மை பாதுகாப்பு மன்றங்கள்’, அதன் கடந்த ஆட்சிகாலத்தில் பள்ளிதோறும் செயல்படுத்தப்பட்டிருந்தன. அவற்றின் நீட்சியாக தற்போதைய தொல்லியல் பயிற்சி தொடங்க இருக்கிறது.

x