பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிக் கட்டிடங்களின் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு உரியோருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. தாழ்வழுத்த காற்று மண்டலம், கன மழை தொடர்பான வானிலை செய்திகள் முக்கியத்துவம் பெற்றுவருகின்றன. கன மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அவசியமெனில் விடுமுறை அறிவுப்புகளையும் மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டு வருகின்றனர்.
பருவமழை அச்சுறுத்தல்களில் ஒன்றாக அரசு பள்ளிக் கட்டிடங்கள் நீடிக்கின்றன. ஒப்புக்கு செய்யப்படும் ஒப்பந்த பணிகளால் எழும் உறுதியற்ற கட்டமைப்பு, போதுமான மராமரத்து இல்லாதது, பள்ளி சுவர்களை மழை நீர் தேங்கா வண்ணம் பராமரிக்காதது உள்ளிட்டவை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கடந்த காலந்தலில் பல்வேறு துயரங்களை தந்திருக்கின்றன. தற்போது பருவமழை தீவிரம் பெற்றிருப்பதை அடுத்து அவை தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் தேவையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
”வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையின் அங்கமாக கல்வித்துறை சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அவசியமான வழகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் தலைமையிலான அதிகாரிகள் அரசு பள்ளிக் கட்டிடங்களை ஆய்வு செய்து வருகிறார்கள். தேங்கிய மழை நீர் காரணமாக ஊறிப்போன சுவர்களை இடித்து அகற்றுமாறும், பாதுகாப்பு குறைவான கட்டிடங்களில் மாணவர்கள் தங்குவதை தவிர்க்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மின்சார சாதனங்கள் மற்றும் அவற்றை இயக்குவது தொடர்பாக தலைமையாசிரியர்களும், கட்டிட சுவர்களை பாதிக்கும் வகையில் பள்ளி வளாகங்களில் மழை நீர் தேங்குவதை தவிர்க்க வட்டார வளர்ச்சி அலுவலர்களும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வார்கள்” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மழைக் காலங்களில் சிறார் பயிலும் பள்ளிக் கட்டிடங்களை கண்காணிப்பதில் பொதுமக்கள் மற்றும் பெற்றோர் இணைந்துகொள்வதும் அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கையில் சேரும்.