டெல்லியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்போது உலக வங்கியில் பணிக்குச் சேர்ந்திருக்கிறார். படித்த படிப்புக்கு வேலை கிடைக்கவில்லையே என்று சோர்வுறும் இளைஞர்களுக்கு மத்தியில், தன் சொந்த முயற்சியில் சோர்வுறாமல் உழைத்து இதைச் சாதித்திருக்கிறார். அவரது வெற்றிக்கதை இதோ!
டெல்லியில் உள்ள ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியில் வணிகவியல் படித்தவர் வத்ஸல் நகாட்டா (23). பின்னர் அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பைத் தொடர்ந்தார். அதன் பின்னர் தனது தகுதிக்கேற்ற வேலை தேடிய அவர், ஒரு முக்கிய முடிவை எடுத்தார். அதாவது, வேலைவாய்ப்பு அறிவிப்புகளையும் தொடர்புகளையும் வெளியிடும் ‘ஜாப் போர்ட்டல்’களைத் தவிர்த்துவிட்டு, நிறுவனங்களை நேரடியாகவே தொடர்புகொள்வது என்று அவர் தீர்மானித்தார். பொதுவாக, இன்றைய இளைஞர்கள் அப்படிச் செய்வதில்லை; தங்கள் கல்வித் தகுதி, பணி அனுபவம் போன்றவற்றை ஜாப் போர்ட்டல்களில் பதிவுசெய்துவிட்டு காத்திருப்பது பலரது வழக்கம். ஆனால், வத்ஸல் துணிந்து அப்படித் தீர்மானித்தார்.
தனது வெற்றிக்கதையை லிங்க்டுஇன் தளத்தில் நீண்ட கட்டுரையாகப் பதிவிட்டிருக்கிறார் வத்ஸல். 15,000-க்கும் மேற்பட்டோர் அதை லைக் செய்திருக்கின்றனர்.
குறிப்பாக, 2020-ல் கரோனா பரவல் உச்சத்தில் இருந்தபோது யேல் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பை இறுதிசெய்யும் தருணத்தில் இருந்தபோது அவர் மனதில் பல்வேறு சிந்தனைகள் உதித்தன. டாலர்களில் சம்பளம் வாங்கும் வேலையில் சேராமல் ஊர் திரும்பக் கூடாது எனும் வைராக்கியத்துடன் அவர் இருந்தார்.
பல நிறுவனங்களைத் தொடர்புகொண்டார். 600 மின்னஞ்சல்களை அனுப்பினார். 80 நிறுவனங்களிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. பல நிறுவனங்கள் அவரை நிராகரித்தன. எனினும், முயற்சியை அவர் கைவிடவில்லை.
இறுதியாக, கடந்த மே மாதம் முதல் வாரம் அவருக்கு நான்கு நிறுவனங்களிடமிருந்து பணியில் சேர அழைப்பு வந்தது - உலக வங்கி உட்பட!
வத்ஸல் உலக வங்கியில் சேர முடிவெடுத்தார். அவருக்கு விசா வழங்குவதாக உலக வங்கி கூறியது. அது மட்டுமல்ல! உலக வங்கியின் ஆய்வுப் பிரிவு இயக்குநருடன் இணைந்து ‘மெஷின் லேர்னிங்’ தொடர்பாக ஒரு ஆய்வு நூலை எழுதும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்திருக்கிறது.
தனது வெற்றிக்கதையை லிங்க்டுஇன் தளத்தில் நீண்ட கட்டுரையாகப் பதிவிட்டிருக்கிறார் வத்ஸல். 15,000-க்கும் மேற்பட்டோர் அதை லைக் செய்திருக்கின்றனர். 100 பேர் அதைப் பகிர்ந்திருக்கின்றனர்.
தனது போராட்ட வாழ்க்கை மற்றவர்களுக்கும் ஊக்கமளிக்கும் என்பதால் அதைப் பகிர்ந்ததாகக் கூறியிருக்கும் வத்ஸல், “உங்கள் தவறுகளிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்டால், வெற்றி கிடைக்கும் வரை கதவுகளைத் தட்டிக்கொண்டே இருந்தால் நல்ல நாட்கள் நிச்சயம் உங்களுக்கு அமையும்” என்று தெரிவித்திருக்கிறார்.
அனைவரும் இதைக் கடைப்பிடிப்போம். வென்று காட்டுவோம்!