நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் 35% பேர் மட்டுமே தேர்ச்சி: பள்ளிக்கல்வித் துறை அதிர்ச்சி தகவல்!
தமிழகத்தில் நீட் தேர்வினை எழுதிய அரசுப்பள்ளி மாணவர்களில் 35 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சிப் பெற்றுள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. நீட் தேர்வு எழுதுவதற்கு மாநிலம் முழுவதும் 17,972 அரசுப்பள்ளி மாணவர்கள் பதிவு செய்திருந்தனர், ஆனால் இதில் 12,840 பேர் மட்டுமே தேர்வினை எழுதினார்கள். தேர்வெழுதிய மாணவர்களில் 4,447 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம், விருதுநகர், நீலகிரி, சேலம், பெரம்பலூர், மதுரை மாவட்டங்களில் இருந்து தேர்வெழுதிய அனைத்து அரசுப்பள்ளி மாணவர்களும் 100 சதவீதம் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். சென்னையிலிருந்து தேர்வெழுதிய 172 மாணவர்களில் 104 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். குறைந்தபட்சமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து தேர்வெழுதிய 7 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
நீட் தேர்வு எனப்படும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வு கடந்த ஜூலை 17ம் தேதி நடைபெற்றது. தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நடந்த இந்த தேர்வை 17,78,725 மாணவ-மாணவிகள் எழுதினர். நீட் தேர்வு முடிவுகளை செப்டம்பர் 7ம் தேதி தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.
இதில் ராஜஸ்தானைச் சேர்ந்த தனிஷ்கா என்ற மாணவி முதலிடமும், டெல்லியைச் சேர்ந்த வட்ஸா ஆஷிஸ் பத்ரா 2வதுஇடத்தையும் பிடித்தனர். இத்தேர்வில் 9.93 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த 1.32 லட்சம் பேர் தேர்வெழுதியதில் 67,787 பேர் மட்டுமே இதில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2020-ல் 57.44 சதவீதமாக இருந்த தேர்ச்சி விகிதம், 2021-ல் 54.40 சதவீதமாகவும், நடப்பாண்டு 51.30 சதவீதமாகவும் குறைந்துவிட்டது. அதுமட்டுமின்றி, நடப்பாண்டு தேசிய தர வரிசையில் முதல் 50 பேரில் தமிழகத்தைச் சேர்ந்த 2 பேர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். தமிழகத்தில் மாணவர் திரிதேவ் விநாயகா 705 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் 30வது இடத்தை பிடித்துள்ளார். தமிழக மாணவி ஹரிணி 702 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் 43வது இடத்தைப் பிடித்துள்ளார்.