அரசுப் பள்ளிகளுக்கான கணினி பயிற்றுநர்கள் நியமனத்தில் குளறுபடி - பட்டதாரிகள் சங்கம் குற்றச்சாட்டு


சென்னை: அரசுப் பள்ளிகளுக்கான கணினி ஆய்வகங்களில் முறையான கல்வித் தகுதி இல்லாத பயிற்றுநர்கள் குறைந்த ஊதியத்தில் நியமிக்கப்பட்டுள்ளதாக பிஎட் பட்டதாரிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கப் பொதுச்செயலாளர் வெ.குமரேசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகம் அமைக்கவும், அதற்கான பயிற்றுநரை நியமிக்கவும் மத்திய அரசு நிதி வழங்கி வருகிறது. இந்த விவகாரத்தில் நிதியை பெற்றுக் கொண்ட தமிழக அரசு, மத்திய கல்வி அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்றவில்லை.

அதன்படி தமிழக அரசின் மாநிலத் திட்ட இயக்குநர் கடந்த மே 31-ம் தேதி வெளியிட்ட செயல் முறை கடிதத்தில் நடுநிலைப் பள்ளிகளில் உயர்தொழில் நுட்ப ஆய்வகம் உருவாக்கப்படுகிறது. அதைக் கண்காணிக்க பயிற்றுநர் என்ற பணியிடம் உருவாக்கப்படும் என்று அறிவித்திருந்தார். ஆனால், அந்த பணியிடத்துக்கு மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட விதிமுறைகளை புறக்கணித்து உரிய கல்வித் தகுதி இல்லாத இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களை நியமனம் செய்துள்ளனர்.

அவர்களை கொண்டு எமிஸ் தளங்களில் தரவுகளை பதிவேற்றம் செய்யும் பணிகளை மேற்கொள்ள உள்ளனர். இத்தகைய கணினி பயிற்றுநர் பணிக்கு கணினி அறிவியல் பயின்ற பிஎட் பட்டதாரிகளையே நியமிக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் 2014ம் ஆண்டில் உத்தரவிட்டுள்ளது. அதற்கு எதிரான தமிழக அரசின் செயல்பாடுகள் அதிருப்தி அளிக்கிறது.

அதேபோல், ஒரு பயிற்றுநருக்கு ரூ.15 ஆயிரம் மாத ஊதியம் வழங்க மத்திய அரசு நிதி வழங்குகிறது. ஆனால், தமிழக அரசுப் பள்ளி ஆய்வகங்களில் பணியாற்றும் பயிற்றுநருக்கு ரூ.11,452 என்றளவில் குறைவான ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசு தமிழக அரசுக்கு வழங்கும் ஐசிடி நிதி முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும். அத்துடன் மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட விதிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்படுகிறதா என்பதையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

x