தொடரும் சோகம்: நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவி தற்கொலை


இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அதில் தோல்வி அடைந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

நீட் தேர்வு எனப்படும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் கடந்த ஜூலை 17ம் தேதி நடைபெற்றது. தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நடந்த இந்த தேர்வை 17,78,725 மாணவ-மாணவிகள் எழுதினர். தமிழகத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் தேர்வு எழுதியிருந்தனர்.

இந்த தேர்வின் முடிவுகள் நேற்று இரவு 11.25 மணியளவில் வெளியானது. இதில் 9.93 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இந்த நிலையில் தமிழகத்தில் நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை அடுத்த திருமுல்லைவாயிலை சேர்ந்த மாணவி லக்ஷனா சுவேதா மருத்துவக் கனவோடு நீட் தேர்வை எழுதியிருந்தார். தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் ஆர்வத்தோடு அதை பார்த்த லக்ஷனா ஸ்வேதா தேர்வில் தோல்வியடைந்திருந்தார். இதனால் மன உளைச்சலோடு தனது அறையில் படுத்திருந்தார்.

அவரது தாயார் இன்று அதிகாலையில் அவரது அறையை திறந்து பார்த்தபோது அங்கே மாணவி உள்ளே தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். உடனடியாக அவரை இறக்கி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருமுல்லைவாயில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வு என்பது உளவியல் ரீதியாக மாணவர்களை பாதித்திருக்கிற ஒன்றாக உள்ளது. நீட் தேர்வு பயத்திலும், நீட் தேர்வு தோல்வியிலும் மாணவர்கள் பலரும் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இதற்காக தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு சட்டம் இயற்றி ஆளுநர் வழியாக மத்திய அரசுக்கு அனுப்பி வைத்திருந்தும் எந்த விலக்கும் இதுவரை அளிக்கப்படவில்லை. இதனால் இந்த தேர்வு இன்னும் எத்தனை மாணவர்களின் உயிரை பலிவாங்க போகிறதோ என்று மாணவர்களின் பெற்றோர்கள் அஞ்சுகிறார்கள்.

x