வெளியானது நீட் தேர்வு முடிவுகள்: 9.93 லட்சம் பேர் தேர்ச்சி


இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் அத்தேர்வு எழுதிய 9.93 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நீட் தேர்வு எனப்படும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் கடந்த ஜூலை 17ம் தேதி நடைபெற்றது. தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நடந்த இந்த தேர்வை 17,78,725 மாணவ-மாணவிகள் எழுதினர். தமிழகத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் தேர்வு எழுதியிருந்தனர்.

இந்திய அளவில் 497 நகரங்களில் உள்ள 3,570 தேர்வு மையங்களிலும் மாணவர்கள் தேர்வு எழுதினர். முதல்முறையாக இந்தியாவுக்கு வெளியே அபுதாபி, பாங்காக், கொழும்பு, தோஹா, காத்மாண்டு, கோலாலம்பூர், லாகோஸ், மனாமா, மஸ்கட், ரியாத், ஷார்ஜா, சிங்கப்பூர், துபாய், குவைத்சிட்டி உள்ளிட்ட இடங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகும் என அறிவிக்கப் பட்டிருந்த நிலையில் இரவு 11.15 மணிக்கு நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.
இதில் ராஜஸ்தானைச் சேர்ந்த தனிஷ்கா என்ற மாணவி முதலிடமும், டெல்லியைச் சேர்ந்த வட்ஸா ஆஷிஸ் பத்ரா 2வதுஇடத்தையும் பிடித்தனர். இத்தேர்வில் 9.93 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

x