வேளாண் இடுபொருள் பட்டயப் படிப்பில் சேர விண்ணப்பிக்க அறிவியல் நிலையம் அழைப்பு


பிரதிநிதித்துவப் படம்

தருமபுரி: வேளாண் இடுபொருள் பட்டயப் படிப்பில் சேர விரும்புவோர் தருமபுரி மாவட்ட வேளாண் அறிவியல் நிலையத்தை அணுகி விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெண்ணிலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில், திறந்தவெளி மற்றும் தொலை தூரக் கல்வி இயக்ககம் சார்பில் 2005-ம் ஆண்டு முதல் தரம் வாய்ந்த பல்வேறு சான்றிதழ், முதுநிலைப் பட்டம் மற்றும் முதுநிலைப் பட்டயப் படிப்புகள் உயர்தொழில் நுட்பத்துடனும் மற்றும் செயல் முறை விளக்கங்களுடனும் பல்கலைக் கழகத்தின் அனுபவம் வாய்ந்த விஞ்ஞானிகளைக் கொண்டு நடத்தப்பட்டு வருகின்றது.

அந்த வரிசையில், சுயதொழில் வாய்ப்பு பெறும் வகையில் ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப் படிப்புக்கான பயிற்சி தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக திறந்த வெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இது, உலக அளவில் முதல் முறையாக இடுபொருள் விற்பனையாளர்களுக்கென்று வழங்கப்படும் ஒரு முன்னோடித் திட்டமாகும்.

வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த உபதொழில்களில் ஈடுபட்டுள்ள உழவர் பெருமக்கள் மற்றும் சுயதொழில் தொடங்க ஆர்வம் கொண்டவர்கள், சுய தொழில் தொடங்கும் வகையிலும் மற்றும் அனைத்து நவீன வேளாண் தொழில் நுட்பங்களையும் தெரிந்து கொள்ளும் வகையிலும் இப்புதிய தொழில் நுட்பப் பட்டயப்படிப்பு வழங்கப்படுகிறது.

இந்த ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப் படிப்பு கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் மற்றும் அதன் கீழ் செயல்படும் கல்லூரிகள், வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள், வேளாண் அறிவியல் நிலையங்கள் மற்றும் சென்னை தோட்டக்கலை மையம் ஆகிய இடங்களில் நேரடி பயிற்சிகள் மூலம் நடத்தப்படவுள்ளது.

2024 - 25-ம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தற்போது வழங்கப்படுகிறது. இதற்கான கட்டணம் ரூ.100. இப்பட்டயப் படிப்பில் சேர, 18 வயதுக்கு மேற்பட்ட பத்தாம் வகுப்பு தேறிய மற்றும் தவறியவர்கள் விண்ணப்பிக்கலாம். 2 பருவங்களைக் கொண்ட ஓராண்டு படிப்பான இதற்கு பயிற்சிக் கட்டணம் ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும்.

விருப்பம் உள்ள தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இம்மாத இறுதிக்குள் பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையத்தை அணுகி விண்ணப் பங்களை பெற்றுக் கொள்ளலாம். நேரடி வகுப்பு வாரம் தோறும் சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலைய வளாகத்தில் உதவிப் பேராசிரியரும் பாட ஒருங்கிணைப்பாளருமான முனைவர் தங்கதுரை தலைமையிலான குழுவினரால் நடத்தப்படும். கூடுதல் விவரங்கள் அறிய, 04342-245860 மற்றும் 96775 65220 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

x