அர்விந்த் கேஜ்ரிவாலுடன் அன்பில் மகேஷ் சந்திப்பு: புதிய திட்டத்தை தொடங்கிவைக்க அழைப்பு!


தமிழகத்தில் செயல்படுத்தப்படவுள்ள புதுமைப்பெண் திட்டத்தின் தொடக்கவிழாவில் பங்கேற்பதற்காக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.

தமிழகத்தில் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 5ம் தேதி தொடங்கப்பட உள்ளது. சென்னை பாரதி மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் அர்விந்த் கேஜ்ரிவால் தமிழகத்தில் 15 மாதிரி பள்ளிகள், 28 தகைசால் பள்ளிகளையும் தொடங்கி வைக்கிறார்.

இந்த விழாவுக்கான அழைப்பிதழை அர்விந்த் கேஜ்ரிவாலிடம் டெல்லியில் இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “ டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் அவர்களை இன்று அவரது இல்லத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி சந்தித்து சென்னையில் நடைபெறவுள்ள புதுமைப்பெண் திட்டம் மற்றும் 26 "தகைசால் பள்ளிகள்" மற்றும் 15 "மாதிரிப் பள்ளிகள்" தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்கான அழைப்பிதழை வழங்கினேன்” என தெரிவித்துள்ளார்

x