கூலிவேலைக்குப் போனாலும் குருப் ஒன் தேர்வு!


தாய், தந்தை மற்றும் தங்கையுடன் பவானியா

பவானியாவை அவரது சாதனைக்காக செட்டியாப்பட்டி கிராம மக்கள் கொண்டாடித் தீர்க்கிறார்கள். டீக்கடைக்காரரின் மகளான பவானியா, ஏழ்மைச் சூழலில் வாழ்ந்து கொண்டு குரூப் 1 தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்வாகி டிஎஸ்பி-யாகி இருப்பது தான் ஊராரின் இந்த உற்சாகக் கொண்டாட்டத்துக்குக் காரணம்.

பள்ளியில் படிக்கும் நாட்களில், “என்னவாகப் போகிறீர்கள்?” என்று ஆசிரியர் கேட்டால், “போலீஸ் ஆவேன்... கலெக்டர் ஆவேன்” என பலரும் பலவிதமாக பதில் சொல்வார்கள். பவானியா, “நான் போலீஸ் ஆவேன் டீச்சர்” என்று சொன்னார். அதுபடியே இதோ இப்போது போலீஸ் அதிகாரி ஆகப் போகிறார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள செட்டியாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வீரமுத்து- வீரம்மாள் தம்பதிக்கு நான்கு பெண் குழந்தைகள். இதில் மூன்றாவது மகள் பவானியா. முதல் இரண்டு பெண்களுக்கும் காலாகாலத்தில் கல்யாணத்தை முடித்தது போலவே, பி.எஸ்சி., முடித்ததும் பவானியாவுக்கும் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார் வீரமுத்து. ஆனால், பவானியா சம்மதிக்கவில்லை. தனக்கான லட்சியத்தை அடைந்த பிறகு திருமணம் என்றார். அதற்காக திருமணத்தை ஒத்திவைத்தார்கள். சொன்னது போலவே மூன்றே ஆண்டுகளில் முன்னேறி அந்த லட்சியத்தை அடைந்துவிட்டார் பவானியா.

பவானியாவின் தந்தை வீரமுத்து அருகிலுள்ள மூக்கனூரில் டீக்கடை நடத்துகிறார். கணவருக்கு உதவியாக மனைவி வீரம்மாளும் அங்குதான் வேலைசெய்கிறார். டீக்கடை வருமானம் போதுமானதாக இல்லாததால் மதிய நேரத்தில் சாப்பாடும் தயார் செய்து விற்கிறார்கள். மேற்கொண்டும் செலவுகளைச் சமாளிக்க சமையல் வேலைக்கும் போய்வருகிறார் வீரமுத்து. அந்த நாட்களில் வயல் வேலைக்குப் போய்விடுகிறார் வீரம்மாள்.

பவானியா

மூத்த சகோதரிகள் இருவரும் திருமணமாகிப் போய்விட்டதால் இந்தக் குடும்பத்துக்கு பவானியா தான் ஆண் பிள்ளை கணக்காய் நின்று அனைத்திலும் தோள் கொடுக்கிறார். காய்கறி நறுக்குவது, தண்ணீர் தூக்கி வருவது, சாப்பாட்டுப் பொட்டலங்களை தயாரிப்பது என படிப்பு நேரம் போக மற்ற நேரங்களில் பெற்றோருக்கு துணையாக நிற்கிறார். வேளாண் நாட்களில் வயல் வேலைக்கும் போகிறார் இந்த பட்டதாரி பெண்.

டிக்கடைக்கு வருபவர்கள் செய்தித்தாள் செய்திகளில் இருக்கும் சாதனையாளர்களைப் பாராட்டுவதும், அவர்களைப் பற்றிய செய்திகளை பேசிக்கொண்டிருப்பதும் பவானியாவின் காதில் அவ்வப்போது விழும். பள்ளி நாட்களில் “உங்க வீட்ல நான்கு பெண்கள் இருக்கீங்க. உங்க அப்பா ஒருத்தரோட வருமானத்துல குடும்பத்தைச் சமாளிக்க முடியாது. அதனால, நீயும் நல்லா படிச்சா உங்க குடும்பம் நல்ல நிலைக்கு வரும்” என்று பவானியாவை பக்குவப்படுத்தினார்கள் ஆசிரியப்பெருமக்கள். அந்த வார்த்தைகளை மனதுக்குள் விதைத்து வளர்ந்த பவானியா, நம்மைப் பற்றியும் இந்த டீக்கடைப் பெஞ்சில் இருப்பவர்கள் ஒருநாள் பேசவேண்டும் என நினைத்தார். அவர் நினைத்தது போலவே அவரைப் பற்றியும் பேசிக்கொண்டிருக்கிறது வீரமுத்துவின் டீக்கடை பெஞ்ச்.

பள்ளி நாட்களில் பவானியாவுக்குள் இருந்த போலீஸ் கனவு, கல்லூரிக்குப் போனதும் கலெக்டர் கனவாக மாறியது. அதற்காகவே, ‘குரூப் ஒன்’ தேர்வு எழுத முடிவெடுத்தார். எனினும், அதற்கான பயிற்சி வகுப்புகளில் பணம் கட்டிப் படிக்கும் அளவுக்கு பவானியாவின் குடும்ப வருமானம் இடம்தரவில்லை. அதனால், தானாகவே படித்தார். கூலி வேலைக்குப் போய்க்கொண்டே ‘குரூப் ஒன்’ தேர்வுக்கும் தயாரானார்.

ஊர்மக்கள் பாராட்டு

வீட்டிலிருந்தபடியே தேர்வுக்குத் தயாரானவருக்கு தேர்வை எப்படி எதிர்கொள்வது என்று முழுமையாகத் தெரியவில்லை. அதற்காக சென்னையிலுள்ள மனிதநேய அறக்கட்டளைக்கு சென்று இரண்டு மாதம் தங்கியிருந்து பயிற்சி பெற்றார். அவ்வளவுதான், அதன் பின்னர் கரோனா கட்டுப்பாடுகள், பொதுமுடக்கம் என வந்து விட்டதால் ஊருக்கே திரும்பிவிட்டார். எனினும் 2021-ல் ‘குரூப் ஒன்’ தேர்வை எழுதிய பவானியா, பிரிலிமினரி தேர்வில் தேர்ச்சி பெற்றார். அடுத்து, இந்த ஆண்டு மார்ச்சில் நடந்த இறுதிக்கட்ட தேர்விலும் வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நேர்முகத் தேர்விலும் தேர்வாகி, தமிழ்வழிக் கல்விக்கான சிறப்பு ஒதுக்கீட்டில் காவல் துணைக் கண்காணிப்பாளர் பணிக்கு தேர்வாகியுள்ளார் பவானியா.

தானாகவே படித்து தேர்வு எழுதி முதல் முயற்சியிலேயே இந்த இடத்துக்கு வந்திருக்கும் பவானியா, ’’நீங்க உங்க பாடத்தை நல்லா படிச்சா, முழுமையா படிச்சா போதும். நினைக்கும் இலக்கை அடைய முடியும். ஆனால், நீங்கள் நினைக்கும் இலக்கு மிக உயர்ந்த பட்சமாக இருக்க வேண்டும். அப்போதுதான் குறைந்தபட்சமாகவாவது கிடைக்கும். நம்முடைய இலக்கு குறைவானதாக இருந்தால் எதுவும் கிடைக்காமல் போகலாம்” என்று தன்னைப்போல கனவுகளுடன் இருப்பவர்களுக்கு தன்னம்பிக்கை வார்த்தைகளைத் தருகிறார்.

பொதுமக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதுதான் காவல் பணியில் தனது முக்கிய வேலையாக இருக்கும் என்று சொல்லும் பவானியா, “ஆபத்தில் இருப்பவர்கள் அல்லது சிக்கலில் இருப்பவர்கள் தங்களின் சூழ்நிலையை மற்றவர்களுக்கு உணர்த்தும் விதமாக பொதுவான சில குறியீடுகளைக் கொண்டு வரவேண்டும். ஒரு வீட்டில் ஒரு பெண்ணுக்கு அடக்குமுறை அல்லது கொடுமை நடக்கும்போது அதை அவர் மற்றவர்களிடம் வாய்விட்டுச் சொல்லமுடியாத சூழலில் இருக்கலாம். அதுமாதிரியான நேரங்களில், ஏதாவது ஒரு குறியீடு மூலம் அந்தப் பெண், தான் ஆபத்தில் இருப்பதை மற்றவர்களுக்கு உணர்த்தலாம்.

அமைச்சர் மெய்யநாதன் வாழ்த்து

அதுபோல, ஒருவர் தன்னை யாரோ பின் தொடர்வதாக சந்தேகப்பட்டால் அதை அவர் ஒரு சைகையின் மூலமாக மற்றவர்களுக்கு உணர்த்தலாம். அந்தக் குறியீட்டின் மூலம் அவர் ஆபத்தில் இருப்பதை நாம் உணர்ந்துகொள்ள முடியும். பேருந்தில் தனியாகப் பயணிக்கும் பெண்கள், பள்ளி- கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவிகள் போன்றவர்களும் தங்களுக்கான பிரச்சினைகளை ஒரு சைகைக் குறியீடுகளை காண்பித்தால் மற்றவர்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் அந்த சைகைக் குறியீடுகள் அமையவேண்டும். அப்படியான சைகை குறியீடுகளை உருவாக்கி அனைவருக்கும் பாதுகாப்பை உருவாக்க வேண்டும் என்பது தான் எனக்குள் இருக்கும் கனவுத் திட்டம்” என்கிறார்.

காவல் பணியில் சேரும் முன்பே தனக்கான திசையைத் தெளிவாக தேர்ந்தெடுத்துவிட்ட பவானியா, இப்போதைக்கு காக்கி உடுப்பை மாட்டிக் கொண்டு கடமையைச் செய்யப் புறப்படுகிறார். குடிமைப் பணி தேர்வு எழுதி ஆட்சியராக வரவேண்டும் என்பதே அவரது அடுத்த இலக்கு.

நிச்சயம் அதையும் சாதிப்பாய் பவானியா... வாழ்த்துகள்!

x