மீண்டும் பொன்னியின் செல்வனைத் தேடும் மக்கள்!


பொன்னியின் செல்வனை ஆர்வமுடன் வாங்கும் மாணவிகள்...

பொதுவாகவே புத்தகக் கண்காட்சிகளில் ‘பொன்னியின் செல்வன்’ நாவலுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். தற்போது மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் ப்ரொமோக்கள் வெளியான பிறகு இளைஞர்கள் மத்தியில் இந்த கதையின் மீதான எதிர்பார்ப்பும், ஆர்வமும் எகிறியுள்ளது. அண்மையில் தஞ்சையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவல் மட்டும் மூவாயிரம் பிரதிகள் விற்றுத் தீர்ந்ததை இதன் பிரதிபலிப்பாகவே பார்க்க வேண்டி இருக்கிறது.

தஞ்சை புத்தக்காட்சியானது, ‘பொன்னியின் செல்வன்’ சிறப்புக் கண்காட்சியாகவே மாறிப்போனது. அங்கிருந்த 111 அரங்குகளில் சுமார் 80 அரங்குகளின் முகப்புகளை அலங்கரித்தது பொன்னியின் செல்வன் புத்தகங்கள்தான். அந்தளவுக்கு, ஏதோ அண்மையில் வெளியான புத்தகம் போல இளைஞர்கள், மாணவர்கள், சிறுவர்கள் என அனைவரின் கைகளிலும் பாரபட்சமின்றி தவழ்ந்தார் பொன்னியின் செல்வர்.

இதில் இன்னொரு முக்கியமான விஷயம், பொன்னியின் செல்வன் வாங்கிய கையோடு, கல்கியின் ‘சிவகாமியின் சபதம்’, ‘பார்த்திபன் கனவு’ உள்ளிட்ட வரலாற்று நாவல்களையும், பாலகுமாரனின் ‘உடையார்’, ‘கங்கைக் கொண்ட சோழன்’ உள்ளிட்ட நூல்களையும், சாண்டில்யனின் நாவல்களையும் அள்ளிக் கொண்டு போனார்கள் வாசகர்கள்.

தஞ்சையைத் தொடர்ந்து தற்போது கோயமுத்தூர் புத்தகக் காட்சியிலும் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட வரலாற்று நூல்களே அதிகம் விற்பனையாவதாகச் சொல்கிறார்கள்.

‘பொன்னியின் செல்வன்’ டீசர்களைப் பார்த்துவிட்டு அதில் வரும் கதாபாத்திரங்கள் மீதான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகமாகியிருக்கிறது. இதனால் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான ராஜராஜ சோழன், ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவன், குந்தவை நாச்சியார் சம்பந்தப்பட்ட புத்தகங்களும் புத்தகக்காட்சிகளில் வாசகர்களால் அதிகளவில் விரும்பி வாங்கப்படுவதாகச் சொல்கிறார்கள்.

இதுபற்றி பேசிய தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) செயலாளர் எஸ்.கே.முருகன், “ பொதுவாக புத்தகக் காட்சியில் பொன்னியின் செல்வன் நாவலானது அதிகபட்சம் 1000 தான் விற்பனையாகும். ஆனால் தஞ்சாவூரில் மூவாயிரம் பிரதிகள் விற்பனையானது இதுவரை இல்லாத சாதனை. தஞ்சை புத்தகக்காட்சிக்கு சில நாட்களுக்கு முன்பாக பொன்னியின் செல்வன் படத்தின் டீசர்கள் வெளியானதால் ஆர்வத்துடன் வந்து விசாரித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூட இந்த புத்தகத்தை அதிகளவில் வாங்கினார்கள்.

அடுத்தடுத்த ஊர்களிலும் நடக்கவிருக்கும் புத்தகக் கண்காட்சிகளிலும் ‘பொன்னியின் செல்வன்’ நாவலின் விற்பனை புதிய உச்சத்தை தொடும் என்று எதிர்பார்க்கிறோம். எப்படியோ, இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை உருவாக்க பொன்னியின் செல்வன் மாதிரியான் நாவல்கள் தூண்டுகோலாக இருந்தால் எங்களுக்கும் மகிழ்ச்சிதான்” என்றார் உற்சாகத்துடன்

எஸ்.கே.முருகன்

தஞ்சை புத்தகக் காட்சியில் வாங்கிய பொன்னியின் செல்வனை விறுவிறுப்பாக படித்துக்கொண்டிருந்த ஐடி நிறுவன ஊழியர் கௌசிக் தனது அனுபவத்தைப் பகிர்கையில், “பொன்னியின் செல்வன் டீசர் வெளியானதில் இருந்து நண்பர்கள் பலரும் அதில் நடித்திருக்கும் கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, த்ரிஷா உள்ளிட்டோரின் கதாபாத்திர பெயர்களை வைத்து தங்களுக்குள் பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் பேசிக்கொள்ளும் கதாபாத்திரங்கள் பற்றி எனக்கு எதுவும் புரியவில்லை. அதனால் அந்த நாவலில் அப்படி என்னதான் இருக்கிறது என்ற ஆர்வம் எனக்குள் எழுந்தது. அதனால் முதல் நாளே போய் இந்தப் புத்தகத்தை வாங்கி படிக்க ஆரம்பித்தேன்.

வொர்க் ஃப்ரம் ஹோம் பணியை முடித்துவிட்டு மாலை நேரத்தில் புத்தகத்தை தொட்டால் நள்ளிரவு வரை படிப்பேன். சாதாரணமா, மற்ற புத்தகங்களை சில பக்கங்கள் புரட்டினாலே தூக்கம் வந்துவிடும். ஆனால், பொன்னியின் செல்வனை தினமும் 50 பக்கம் படித்தாலும் மூடிவைக்கவே மனசு வரமாட்டேங்கிறது” என்று சொன்னார்.

கௌசிக்

உண்மைதான். பொன்னியின் செல்வனின் கதாபாத்திரங்களும், அதனை கல்கி விவரித்திருக்கும் விதமும், சோழர் காலத்துக்கே நம்மைக் கைபிடித்து அழைத்துச் செல்லும். கல்கியின் எழுத்தைப் படிக்கையில், போர்க்களக் காட்சிகளில் நாம் ஒரு குதிரைப்படை வீரனாக துடிப்போம். பழையாறையின் தெருக்களில் ஒரு பாதசாரியாக நடப்போம். தஞ்சையின் வீதிகளில் ஒரு வழிப்போக்கனாக நிற்போம். ஆதித்த கரிகாலன் கொலைக்களத்தில் தேம்பித்திணறி அழுவோம். இலங்கையின் கடலில் ஒரு படகோட்டியாக மிதப்போம். நந்தினியின் ஆபத்துதவிகளில் ஒரு சிப்பாயாக சிலிர்ப்போம்.

இப்படி காட்சியோடு காட்சியாக, எழுத்தோடு எழுத்தாக, வார்த்தைகளோடு வார்த்தையாக, சோழ சாம்ராஜ்ஜியத்தின் ஒரு பிரஜ்ஜையாக நம்மை பொன்னியின் செல்வன் மாற்றியிருக்கும். இதுதான் 1950-களில் எழுதப்பட்டு 2022 -ம் ஆண்டிலும்கூட அந்த புத்தகம் பேசப்படுவதற்கான காரணம்.

தொடர்ந்து பேசிய கௌசிக் பொன்னியின் செல்வனில் தனக்கு பிடித்தவற்றைப் பற்றி பேசுகிறார். “டெக்னாலஜியைப் பயன்படுத்தி சினிமாவில் ஒரு காட்சியை எளிதாக காட்டி விடலாம். எழுத்தில் விவரிப்பது மிகவும் கஷ்டம். வீரநாராயணன் ஏரி, இலங்கை கடல், வீரபாண்டியன் போர்க்களம், தஞ்சை அரண்மனை வீதிகள் என எல்லாவற்றையும் அத்தனை ரம்யமாக கல்கி விளக்கிச் சொல்வதைப் படிக்கும்போதே நாம் அந்த இடத்துக்கே பறந்துவிடுகிறோம். நான் படித்த அளவில், ஆதித்த கரிகாலன் கொலையாகும் இடத்தில் நான் கலங்கிப் போனேன். அதுபோல, பழுவேட்டரையரின் கம்பீரமும் நிமிர்ந்து நிற்கிறது.

முக்கியமாக, கல்கி அவர்கள் வந்தியத்தேவனுக்கு குதிரை, ஆதித்த கரிகாலனுக்கு வாள்-வில் அம்பு, அருண்மொழி வர்மனுக்கு யானை என ஒவ்வொரு அடையாளத்தை சிறப்பாக வைத்திருக்கிறார். அதுபோல படகோட்டி பூங்குழலியின் சவாலான வாழ்க்கை, நந்தினியின் ரணம் சூழ்ந்த வாழ்க்கை, குந்தவையின் ஆற்றல் நிறைந்த வாழ்க்கை என பிரமிக்க வைக்கிறார். ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ என்ற புகழ் பெற்ற வெப்சீரிஸ் எனக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் இதுபோல ஒரு சாம்ராஜ்ஜியத்தின் கதைதான். அதைப்போல இதையும் விறுவிறுப்பாக எடுக்கலாம். இந்த புத்தகத்தை படித்ததிலிருந்து எப்போது பொன்னியின் செல்வன் படம் வரும் என்று ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்” என்று உற்சாகம் குறையாமல் பேசினார் கௌசிக்.

செல்போன் யுகம் வந்த பிறகு இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடம் புத்தக வாசிப்பு என்பதே அரிதாகிப் போய்விட்டது. இந்த நிலையில், அவர்களின் கைகளிலும் ‘பொன்னியின் செல்வன்’ நாவல் தவழ்வது நல்லதொரு மாற்றம் தான். இத்தகைய மாற்றத்தை விதைத்து இளம் தலைமுறையினர் மத்தியில் வாசிப்பு ஆர்வத்தை தூண்டியமைக்காக ‘பொன்னியின் செல்வன்’ இயக்குநர் மணிரத்னத்தையும் மனதாரப் பாராட்டுவோம்!


படங்கள்: ஆர்.வெங்கடேஷ்

x