விருத்தாசலம் அருகிலுள்ள பெரியநெசலூர் கிராமம். இங்கு வசிக்கும் செல்வி-ராமலிங்கம் தம்பதிக்கு ஆசைக்கு ஒரு மகள், ஆஸ்திக்கு ஒரு மகன். சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார் ராமலிங்கம். எல்ஐசி முகவராக இருக்கிறார் செல்வி. தங்கள் பிள்ளைகளை நன்கு படிக்க வைக்கவேண்டும் என்ற ஆசையில் சின்னசேலம் அருகேயுள்ள கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியில் படிக்க வைத்தார்கள்.
இருபது வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட அந்தப் பள்ளி ப்ளஸ் டூ -வில் தொடர்ந்து நல்ல ரிசல்ட் காட்டியது. மிகவும் கண்டிப்பான பள்ளியும்கூட. திறமையான ஆசிரியர்களைக் கொண்டு, இங்குபடித்த அதிகம் பேரை மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும், அரசு ஊழியர்களாகவும் ஆக்கியிருக்கிறது. இதற்காகவே மாணவர்களை கசக்கிப் பிழிவது அங்கேயுள்ள நடைமுறை. இருந்தும், மதிப்பெண் ஆசையில் அங்கு பிள்ளைகளை சேர்க்க பெற்றோர் மத்தியில் போட்டா போட்டி இருக்கும். தற்போதைய நிலையில் அங்கு சுமார் 3,500 பிள்ளைகள் படிக்கிறார்கள்.
வீட்டிலிருந்து பள்ளிப் பேருந்தில் சென்று வந்துகொண்டிருந்த ஸ்ரீமதியை சில காரணங்களால் இந்த ஆண்டு வேறு பள்ளிக்கு மாற்ற விரும்பினார் ராமலிங்கம். ஆனால், பள்ளி நிர்வாகம் சம்மதிக்கவில்லை. அதனால் அங்கேயே ப்ளஸ் டூ படிப்பை தொடர்ந்தார் ஸ்ரீமதி. ஆனால், படிப்புச் சுமை அதிகமாக இருக்கும் என்பதால் மகளை பள்ளி ஹாஸ்டலில் சேர்த்துவிட்டார் ராமலிங்கம். சேர்த்து 13-ம் நாளில் அவரின் தலையில் இடி விழுந்தது போல வந்தது மகளின் மரணச்செய்தி.
மாடியிலிருந்து கீழே குதித்து விழுந்துகிடந்த ஸ்ரீமதியை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறோம் என்று தான் பள்ளி தரப்பில் முதலில் சொன்னார்கள். ஆனால் மருத்துவர்களோ, “இங்கு வருவதற்கு முன்பே அந்தப் பெண் இறந்துவிட்டார்” என்று சொல்லி அதிரவைத்தார்கள். இந்த நிலையில், பள்ளி நிர்வாகம் தரப்பிலும் ராமலிங்கத்தைச் சந்திக்க யாரும் தயாராய் இல்லை.
ஸ்ரீமதி மாடியிலிருந்து விழுந்ததாகச் சொல்லப்படும் இடத்தில் எவ்வித ரத்தக்கறைகளும் இல்லாததும் சந்தேகத்தை வலுப்படுத்தியது. பெற்றோர் இல்லாமல் நடந்த பிரேதப் பரிசோதனையும், ‘மரணிக்கும் முன்னரே காயங்கள் ஏற்பட்டுள்ளது, உள்ளாடைகளில் ரத்தம் இருந்தது’ என்பது போன்ற பிரேதப் பரிசோதனை அறிக்கை விவரங்களும் முரண்பட்டு நிற்பதைப் பார்த்ததும், மகள் மரணத்தில் ஏதோ மர்மம் இருக்கிறது என்ற முடிவுக்கு வந்தனர் ஸ்ரீமதியின் பெற்றோர்.
இதையடுத்தே ராமலிங்கம் தரப்பினர் பள்ளியைக் கண்டித்து போராட்டத்தில் குதித்தனர். மகளைப் பறிகொடுத்த ஆதங்கத்தில் இவர்கள் நடத்திய போராட்டத்துக்குள் அந்தப் பள்ளிக்கு வேண்டாத பலரும் ஊடுருவியதுடன் போராட்டத்தை தங்களுடையதாகவே மாற்றிக் கொண்டார்கள். அதன் விளைவாக கலவரம் வெடித்தது. பள்ளி வளாகத்தையே போர்க்களமாக்கிய கலவரத்தின் பின்னணி குறித்து ஆளாளுக்கு ஒரு தகவலைச் சொல்கிறார்கள். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகமாக இருக்கிறது.
பள்ளியின் தாளாளர் சக்தி ரவிக்குமார் பாஜக தமிழ் வளர்ச்சிக் குழுவின் முன்னாள் மாநில அமைப்பாளராக இருந்தவர். எச்.ராஜா நடத்தி வரும் இந்து ஆலயங்கள் மீட்பு இயக்கத்தில் பங்கேற்றவர். அவருடன் மிக நெருக்கமாக பழகி வருபவர். 2019-ல், ஆர்எஸ்எஸ் அமைப்பின் பண்பு பயிற்சி முகாம் நடத்த தனது பள்ளியை ஒதுக்கிக் கொடுத்தவர் சக்தி ரவிக்குமார். கடலூர், புதுச்சேரி, விழுப்புரத்திலிருந்து 120 பேர் கலந்துகொண்ட இந்த முகாமில் தேச பக்தி, ராணுவ நடைபயிற்சி, சிலம்பம், கராத்தே போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டது. அதற்கு முன்பும், பின்பும் இங்கு பலமுறை ஆர்எஸ்எஸ் சார்ந்த நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இதையெல்லாம் மனதில் வைத்திருந்த இந்துத்துவா எதிர்ப்பு அமைப்புகள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பள்ளியை துவம்சம் செய்துவிட்டதாக ஒரு தரப்பினர் சொல்கிறார்கள்.
ஆர்எஸ்எஸ் ஆதரவாளராக இருந்தாலும் அனைத்துக் கட்சிகளிலும் மேல்மட்டத்தில் நெருக்கமான தொடர்புகளை ரவிக்குமார் வைத்திருக்கிறார். ஈபிஎஸ்சின் நெருங்கிய சகாவான சேலம் இளங்கோவனுக்கும் மிக நெருக்கமானவர். உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ-க்களுடனும் நல்ல நட்பில் இருக்கிறார். இத்தகைய காரணங்களால் உள்ளூரில் சிறிய கட்சிகளையும், அமைப்புக்களையும் பெரிதாக அவர் மதிப்பதில்லையாம். யாருக்கும், எந்த கட்சிக்கும் நன்கொடை அளிப்பதும் இல்லை. நோட்டீஸ், வசூல் என்று யாரும் பள்ளிக்குள் வர அனுமதி இல்லை. இதுவும் சின்னசேலம் பகுதியில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்தவர்களுக்கு பலநாள் ஆத்திரம். கலவரத்தின் பின்னணியில் இந்த ஆத்திரத்தின் சூத்திரமும் இருக்கிறது என்கிறார்கள்.
இன்னொரு பக்கம் மாணவி ஸ்ரீமதியின் சமூகத்தினர், ‘ஜஸ்டிஸ் ஃபார் ஸ்ரீமதி’ என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி சமூகவலை தளத்திலும் இந்தப் பிரச்சினைக்கு நியாயம் கேட்டு வைரலாக்கினர். ‘இதுவே வேறு சமூகத்தைச் சார்ந்த மாணவி இறந்திருந்தால் அந்த சமூகத்தைச் சார்ந்தவர்கள் சும்மா விட்டிருப்பார்களா?’ என்ற கேள்வியை எழுப்பி சமுதாய இளைஞர்களை சிலர் உசுப்பிவிட்டார்கள். இதைப் பார்த்துவிட்டு வெளியூர்களில் இருந்து படைதிரட்டி வந்தவர்களும் வன்முறையில் கைகோத்திருக்கிறார்கள்.
‘இதேபள்ளியில் பேருந்து விபத்தில் இருவர், கழிவறையில் ஒருவர், வகுப்பறைக்கு வெளியே ஒருவர், மாடியிலிருந்து விழுந்து ஒருவர் என இதுவரை ஐந்து பேர் இறந்திருக்கிறார்கள். இது ஆறாவது மரணம். இப்படி தொடர்ந்து நடப்பதை அனுமதிக்கலாமா?’ என்று பரவிய செய்தியும் பொதுமக்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் பலரை ஆத்திரப்படுத்தியது. அதனாலும் பலர் வன்முறை களத்துக்கு வந்தார்கள். ‘காவல் துறை உயரதிகாரி ஒருவர் அந்தப் பள்ளிக்கு மிகவும் வேண்டப்பட்டவர். அதனால் உண்மையை மறைத்து பள்ளி நிர்வாகத்தைக் காப்பாற்றப் பார்க்கிறது போலீஸ்’ என்று சிலரால் பரப்பட்ட தகவலும் கலவரம் உக்ரமடையக் காரணமானது.
இதனிடையே, ஸ்ரீமதி இறந்துவிட்டார் என்று தெரிந்ததும் பள்ளி நிர்வாக தரப்பைச் சந்தித்த அப்பகுதி அரசியல்வாதிகள் சிலர், பிரச்சினையை கமுக்கமாக முடிக்க கோடிகளில் பேரம் பேசியதாகவும், அவ்வளவு பெரிய தொகைக்கு ஒத்துவராத பள்ளி நிர்வாகத் தரப்பு, “கோர்ட்டில் வழக்கைச் சந்திக்கலாம்” என்று கறாராகச் சொன்னதாகவும் சொல்கிறார்கள். நடந்த வன்முறைகளுக்குப் பின்னால் இந்தப் பேரங்களின் பின்னணியும் இருப்பதை மறுப்பதற்கில்லை என்கிறது போலீஸ்.
இவையெல்லாம் ஒருபுறமிருக்க, ஸ்ரீமதி மர்ம மரணத்தின் சாட்சியங்களை திட்டமிட்டு அழிப்பதற்காகவே இந்த கலவரம் தூண்டிவிடப்பட்டதாகவும் சிலர் பகீர் கிளப்புகிறார்கள். “காவலாளி அறை, ஸ்ரீமதி பலியான நேரத்தில் பதிவான சிசிடிவி கேமரா பதிவுகள், அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசென்ற பேருந்து உள்ளிட்டவை குறிவைத்து எரிக்கப்பட்டதற்கு வேறென்ன காரணமாக இருக்கமுடியும்?” என்பதே அவர்களின் கேள்வியாக இருக்கிறது. அதேசமயம் இந்தப் பள்ளிக்குப் போட்டியாக இருக்கும் சில பள்ளிகளின் சதிவேலையும் இதில் இணைந்திருக்கலாம் எனவும் இன்னொரு தரப்பில் சந்தேகம் கிளப்புகிறார்கள்.
இப்படி கலவரத்துக்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் நடந்த வன்முறை ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்று உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளன. இளைஞர்கள் இப்படி புறத்தூண்டலால் உணர்ச்சிவசப்படுவது அவர்களின் எதிர்காலத்துக்கு மட்டுமல்லாது தேசத்துக்கும் நல்லதல்ல. நேர்மையான கோபத்தை அவர்கள் பிரயோகப்படுத்தும்போது நேர்மையற்ற கலவரக்காரர்களால் உயிர்ப்பலியும், கொள்ளையும் திட்டமிட்டு நடைபெறுகிறது. அதில் அநீதிக்கு எதிராக போராடக் கிளம்பும் தங்களது எதிர்காலமும் சேர்த்து கொள்ளைபோய்விடக் கூடும் என்பதை இளைஞர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.
விசாரணையும் விசாரிப்புகளும் இப்படி கலவரத்தை நோக்கியே திரும்பி இருக்கும் நிலையில், ஸ்ரீமதியின் மரணம் தற்கொலைதான் என்பதில் பள்ளி நிர்வாகம் தரப்பில் உறுதியாக இருக்கிறார்கள். காவல் துறையினரும் ஸ்ரீமதியின் கடிதத்தையும் தங்களது முதல்கட்ட விசாரணையையும் மேற்கோள் காட்டி இதை உறுதிசெய்கிறார்கள். அந்தக் கடிதத்தின் அடிப்படையிலேயே வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியாவையும், கணித ஆசிரியை கீர்த்திகாவையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஆசிரியைகள் இருவரும் ஸ்ரீமதிக்கு அதிகமாக நெருக்கடி கொடுத்ததோடு மற்றவர்களிடமும் அவரைப் பற்றி தரக்குறைவாகப் பேசியதால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்கிறது போலீஸ் வட்டாரம். அதிகாலையில் பள்ளிக்கு பால் கொண்டு வரும் பால்காரர்தான் ஸ்ரீமதி கீழே விழுந்து கிடந்த தகவலை மற்றவர்களுக்குச் சொல்லியிருக்கிறார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இதை உறுதி செய்திருக்கிறது போலீஸ். எனினும் தாளாளர் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது ஆத்திரத்தில் இருப்பவர்களை அமைதிப்படுத்த மட்டுமே என்கிறார்கள்.
2005-ம் ஆண்டு டிசம்பரில் இந்தப் பள்ளியைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தியது. கல்விக் கட்டணம் செலுத்தவில்லை என்றால் கொடூரமான தண்டனைகளை கொடுப்பது, படிப்பதற்காக மாணவர்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தம், பள்ளியில் நடந்த தற்கொலைகள் மற்றும் விபத்துகள் ஆகியவற்றைக் கண்டித்து அந்த போராட்டம் நடந்தது. அப்போதே பெற்றோரும், கல்வித்துறை அதிகாரிகளும் இதுகுறித்து போதிய கவனமும், அக்கறையும் செலுத்தியிருந்தால் ஒருவேளை ஸ்ரீமதி மரணம்கூட தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
நடக்கக்கூடாதது நடந்துவிட்டது. பிள்ளையைப் பறிகொடுத்தவர்களுக்கு உரிய பரிகாரம் கிடைக்கட்டும். தமிழகத்தில் இதுபோல இனியொரு சம்பவம் நடக்காதிருக்க அரசும் அதிகாரிகளும் உரிய நடவடிக்கைகளை எடுக்கட்டும்!