சென்னை: சுரங்க தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகையை பெறுவதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்குமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அழைப்பு விடுத்துள்ளார்.
பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின் 1-ம் வகுப்பு முதல் தொழில் முறைப் படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு ரூ.25 ஆயிரம் வரை கல்வி உதவித் தொகைகள் மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் கல்வி உதவித் தொகை பெறுவதற்காக விண்ணப்பங்கள் மின்னணு முறையில் https://scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித் தொகை இணைய தளத்தின் வாயிலாக பெறப்பட்டு வருகின்றன.
உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்களுக்கென தனியாக தேசியமயமாக்கப் பட்ட வங்கியில் தேசிய மின்னணு பரிவர்த்தனை வசதிகளை பெற்றிருக்க வேண்டும். அதேபோல தங்களது ஆதார் எண்ணை சேமிப்பு வங்கிக்கணக்குடன் இணைத்திருக் கவும் வேண்டும்.
ஆராய்ந்து ஒப்புதல்: மேலும் பதிவு செய்யப்படாத பள்ளிகள் மேற்கண்ட இணையதளத்தில் முதலில் பதிவு செய்து, அதில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின் படி விண்ணப்பங்களை ஆராய்ந்து ஒப்புதல் வழங்கி, கல்வி நிறுவனங்களின் பதிவு செய்யப்பட்ட முகவரியில் இருந்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை 1 முதல் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் வரும் ஆக.31-ம் தேதிக்குள்ளும், உயர் கல்வி மாணவர்கள் அக்.31-ம் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப் படுகிறது.
கூடுதல் விவரங்களை 044-29530169 என்ற தொலைப்பேசி எண்ணையும் அல்லது கிண்டி,திரு.வி.க.தொழில் பூங்காவில் அமைந்துள்ள தொழிலாளர் நல அமைப்பின் மத்தியநல ஆணையர் அலுவலகத் தையும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.