'வன்முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ - டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை


சைலேந்திர பாபு

சின்னசேலம் மாணவி இறப்பு விவகாரத்தில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் உடனடியாக வன்முறையை நிறுத்திக் கொள்ள வேண்டும், வன்முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.

சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இதில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவரது பெற்றோர்கள் கடந்த மூன்று தினங்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்று அவர்களுடன் பல்வேறு இயக்கங்களை சேர்ந்தவர்களும் இணைந்து கொண்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை முன்பாக சாலை மறியல் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அது இன்று தீவிரமடைந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர். மாணவி பயின்ற கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி வளாகத்திற்கு முன்பாக திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை தடுக்க முயன்ற காவல்துறையினர் கல்வீசி கடுமையாக தாக்கப் பட்டனர். அதில் டிஜிபி உள்ளிட்ட காவல்துறையினர் பலரும் காயம் அடைந்தனர். பள்ளி வாகனங்கள் மற்றும் காவல்துறை வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. பள்ளியை வன்முறையாளர்கள் அடித்து நொறுக்கினர்.

கலவரத்தை அடக்குவதற்கு அங்குள்ள போலீஸார் தொடர்ந்து முயன்று வருகின்றனர். பிற மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார் விரைந்து வந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் உடனடியாக இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்தார் தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு.

அப்போது அவர் கூறியதாவது.., “இந்த வழக்கில் உரிய புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. உரிய காரணங்கள், ஆதாரம் இன்றி ஆசிரியர்களை கைது செய்வது முடியாது. அமைதியாக தொடங்கிய போராட்டம் திடீரென கலவரமாக மாறி உள்ளது. போராட்டக்காரர்கள் கலவரத்தில் ஈடுபடாமல் அமைதி காக்க வேண்டும். வன்முறையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வீடியோ பதிவு அடிப்படையில் எதிர்காலத்தில் அவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

போராட்டம் செய்பவர்கள் வன்முறையில் ஈடுபட்டு பொருட்களை சேதப்படுத்தியது கண்டிக்கத்தக்கது. காவலர்களை தாக்குவதும், காவல்துறை வாகனங்களை தாக்குவதும் முறையல்ல. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அங்கு போலீசார் இருக்கின்றனர். மேலும் 500க்கும் மேற்பட்ட அதிரடி படையினர் அங்கு விரைந்து சென்று கொண்டிருக்கிறார்கள். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது முழுமையான விசாரணைக்கு பின்பு நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் இருந்து உரிய இழப்பீடு வெளியே வசூலிக்கப்படும்" என்று சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.

x