அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியில் இருந்து எடுக்கப்பட்ட முதல் முழு வண்ணப் படத்தை அதிபர் ஜோ பைடன் வெளியிட்டார். பிரபஞ்சத்தின் நட்சத்திரங்கள் ஒளிரும் மிகத்தெளிவான இந்த புகைப்படம் பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது.
ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி மற்றும் கனடா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து நாசா ‘ஜேம்ஸ் வெப்’ என்ற மிகப்பெரிய தொலைநோக்கியை உருவாக்கியது. அகச்சிவப்புக்கதிர்களால் ஏற்படும் ஒளியானது தொலைநோக்கியை பாதிக்கக்கூடாது என்பதற்காக ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பூமியிலிருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டுள்ளது.
பெருவெடிப்புக்குப் பிறகு என்ன நடந்தது, விரிவடையும் பிரபஞ்சம் எவ்வாறு குளிர்ந்து கருந்துளைகள்,விண்மீன் திரள்கள், நட்சத்திரங்கள், கிரகங்கள் மற்றும் மனிதர்களை உருவாக்கியது, பூமிக்கு அப்பால் உயிர்ப்புள்ள கோள்கள் உள்ளனவா, முதல் நட்சத்திரம் எப்படி உருவானது என்பதை கண்டறியும் நோக்கத்துடன் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை நாசா உருவாக்கியுள்ளது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி நமது சூரிய குடும்பத்தில் உள்ள மர்மங்களைத் தீர்க்கும் என்றும், மற்ற நட்சத்திரங்களைச் சுற்றியுள்ள தொலைதூர உலகங்களுக்கு அப்பால் பார்க்க உதவும் என்றும், நமது பிரபஞ்சத்தின் மர்மமான கட்டமைப்புகள்,தோற்றம் மற்றும் அதில் உள்ள நமது இடத்தை ஆராயும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.
ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி என்பது உலகின் முதன்மையான விண்வெளி அறிவியல் ஆய்வகமாகும். இது கடந்த ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி தென் அமெரிக்காவின் பிரெஞ்சு கயானாவில் உள்ள ஐரோப்பாவின் ஸ்பேஸ்போர்ட்டின் ஏரியன் 5 ராக்கெட்டின் மூலம் ஏவப்பட்டது. இந்த தொலைநோக்கியை உருவாக்க 75 ஆயிரம் கோடி ரூபாயை நாசா செலவளித்துள்ளது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள ஜேம்ஸ் வெப்பின் முதல் முழு வண்ணப் படமான கேலக்ஸி கிளஸ்டர் SMACS 0723 என்பது அகச்சிவப்புக் கதிர்களின் ஒளியால் இதுவரை காணமுடியாத மங்கலான பொருள்கள் உட்பட ஆயிரக்கணக்கான விண்மீன் திரள்களை காட்சிப்படுத்தியுள்ளது.
இந்த புகைப்படத்தை வெளியிட்டு பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "அமெரிக்கா பெரிய விஷயங்களைச் செய்ய முடியும் என்பதை இந்த படங்கள் உலகிற்கு நினைவூட்டுகின்றன, மேலும் அமெரிக்க மக்களுக்கு குறிப்பாக நமது குழந்தைகளுக்கு நமது நாட்டின் திறனைத் தாண்டி எதுவும் இல்லை என்பதை நினைவூட்டுகின்றன. இந்த தொலைக்காட்சி மூலம் இதுவரை யாரும் பார்த்திராத சாத்தியக்கூறுகளை நாம் பார்க்க முடியும். இதுவரை யாரும் செல்லாத இடங்களுக்கு நாம் செல்லலாம்” என தெரிவித்தார்
இந்த புகைப்படம் குறித்து பேசிய நாசா நிர்வாகி பில் நெல்சன்" இது ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் முதல் முழு வண்ணப் படம் மட்டுமல்ல. இது தொலைதூர பிரபஞ்சத்தின் ஆழமான மற்றும் கூர்மையான அகச்சிவப்புப் படம். இது பரந்த பிரபஞ்சத்தின் ஒரு சிறிய துண்டு. மனிதகுலத்தின் நலனுக்காக நாம் ஒன்றிணைந்து செயல்படும்போது எதிர்காலத்தில் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதன் ஆரம்பம் தான் ஜேம்ஸ் வெப்" கூறினார்