வழக்குகளுக்காக ரூ.28.15 லட்சம் செலவழித்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் - பேரவை கூட்டத்தில் தகவல்


மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம்

திருநெல்வேலி: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நீதிமன்ற வழக்குகளுக்கான மொத்த செலவு 28 லட்சத்து 15 ஆயிரத்து 950 ரூபாய் என பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற ஆட்சிப் பேரவை கூட்டத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 45வது ஆட்சிப் பேரவை கூட்டம் பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் செனட் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர், உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துணைவேந்தர் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்கள் பதிலளித்தனர். இந்த ஆட்சிப் பேரவை கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தனியார் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம், பணிப் பாதுகாப்பு தொடர்பான சட்டப் பாதுகாப்பை தமிழ்நாடு அரசு கேரளாவை போன்று நிறைவேற்ற வேண்டும் என்றும், தமிழ்நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கு எவ்விதமான நுழைவு தேர்வும் நடத்தக்கூடாது என்றும், புதிய தனியார் பல்கலைக்கழகங்கள் தொடங்க தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள சட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதனிடையே திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தொடர்பாக, நடைபெற்று வரும் வழக்குகள் மற்றும் அவற்றிற்கான செலவீனங்கள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, மாவட்ட நீதிமன்றத்தில் 2022ம் ஆண்டு 2 வழக்குகளும், 2023ம் ஆண்டு 6 வழக்குகளும் என மொத்தமாக 8 வழக்குகள் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உயர் நீதிமன்றத்தில் பல்கலைக்கழகம் தொடர்பாக 2022ம் ஆண்டு 10 வழக்குகளும், 2023ம் ஆண்டு 53 வழக்குகளும் என மொத்தமாக 63 வழக்குகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகளுக்காக கடந்த 2 ஆண்டுகளில் 28 லட்சத்து 15 ஆயிரத்து 950 ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆட்சிப் பேரவை கூட்டத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

x