டிஎன்பிஎல் சிஎஸ்ஆர் திட்டத்தில் இலவச டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்


கோப்புப்படம்

கரூர்: தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் (டிஎன்பிஎல்) சமுதாய நலப்பணித் திட்டத்தின் (சிஎஸ்ஆர்) ஒருபகுதியாக, ஒவ்வொரு ஆண்டும் 5 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் திருச்சி சேஷசாயி தொழில்நுட்ப நிறுவனத்தில் காகிதக்கூழ் பிரிவில் மூன்றரை ஆண்டுகள் இலவசகல்வி பயில வழிவகை செய்யப்படுகிறது.

மாணவர்களுக்கான கல்வி, தேர்வு, விடுதிக் கட்டணங்கள் ஆகியவை டிஎன்பிஎல் நிறுவனத்தால் கல்லூரிக்கு செலுத்தப்படும். இந்த கட்டணமில்லா கல்வித் திட்டத்தில் சேர்ந்து பயன்பெற, கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை அலகு-1(யூனிட்) உள்ள புகழூர் நகராட்சி, புஞ்சை தோட்டக்குறிச்சி, நஞ்சை புகழூர், புன்னம், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, வேட்டமங்கலம் ஆகிய ஊராட்சிகள் மற்றும் திருச்சி மாவட்டம் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை அலகு-2 உள்ள மொண்டிப்பட்டி, கே.பெரியப்பட்டி, சித்தாநத்தம், பாதிப்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்கவேண்டும்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் 18 வயதுக்குஉட்பட்டவராக இருக்க வேண்டும்.10-ம் வகுப்பு பொதுத் தேர்வில்அறிவியல் மற்றும் கணிதம் பாடங்களில் பெற்ற சராசரி மதிப்பெண்களின் அடிப்படையில் மொத்தம் 5 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பப் படிவங்களை புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் அலகு 1-ன் மனித வளத் துறையிலும் மற்றும் மொண்டிப்பட்டி அலகு 2-ன் கால அலுவலகத்திலும் பெற்று பூர்த்தி செய்து, விண்ணப்பங்கள் பெறப்பட்ட இடத்திலேயே ஜூன் 10-ம் தேதி மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

x