வகுப்பறையில் பாடம் நடத்திய தமிழ் டீச்சர்... மாணவர்களுடன் அமர்ந்து ஆர்வத்துடன் கவனித்த முதல்வர்: ஆய்வில் ருசிகரம்


ஆய்வுக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின் வகுப்பறையில் மாணவர்களோடு அமர்ந்து ஆசிரியர் பாடம் நடத்துவதைக் கவனித்தார். கல்வி அமைச்சர் அன்பில் மகேஷும் அவருக்குப் பின்னால் அமர்ந்து பாடத்தைக் கவனித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அருகில் உள்ள வகுப்பறைக்குச் சென்ற முதல்வர் மாணவர்களின் கல்வித்திறன் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். “செயல் முறைக் கல்வி என்பது கல்லில் வடித்த சிற்பம் போன்று மாணவர்கள் மனதில் படிந்து விடும். இங்கிருக்கும் செயல்பாடுகள் அனைத்தும் பள்ளி மாணவர்களாலேயே செய்யப்பட்டது” என ஆசிரியர்கள் முதல்வருக்கு விளக்கினார்கள். அதன்பின்பு வகுப்பறையில் உள்ள கரும்பலகையில் மாணவர்கள் தமிழ் எழுத்துக்களை எழுதிக் காட்டினார்கள். செயல்முறைக் கல்வியை ஆய்வு செய்த முதல்வரிடம் மாணவர்கள் பாடல்களைப் பாடி ஆடிக்காட்டினார்கள்.

நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு வடகரைப் பகுதியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்தார் முதல்வர் ஸ்டாலின். அங்குள்ள கழிவறை மற்றும் வகுப்பறைகளிலும் ஆய்வு செய்த முதல்வர் பத்தாம் வகுப்பு வகுப்பறைக்குள் சென்றார். அங்கிருந்த ஆசிரியையிடம் ‘நீங்க எந்த பாடம் எடுக்கிறீங்க?’ என வினவினார். தமிழ்ப் பாடம் எடுப்பதாக ஆசிரியர் சொன்னதும் உற்சாகமான முதல்வர், அவரை வகுப்பெடுக்க சொல்லிவிட்டு மாணவர்கள் மத்தியில் பென்ச்சில் அமர்ந்தார். அவருக்குப் பின் வரிசையில் உள்ள பென்ச்சில் கல்வி அமைச்சர் அமர்ந்தார். இதனால் மாணவர்கள் குஷியானார்கள். முதல்வரையும், கல்வி அமைச்சரையும் சக மாணவர் போன்று அருகில் அமர வைத்துக் கொண்டு ஆசிரியர் பாடம் எடுத்தது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

x