கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவ- மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றனர்.
கரோனா பரவலுக்கு பிறகு கடந்த ஆண்டு பள்ளிகள் நவம்பரில் திறக்கப்பட்டது. இதனால், அனைத்து மாணவ, மாணவர்களுக்கும் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன. இதன் அடிப்படையிலேயே 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டது. இந்த மாத இறுதியில் பொதுத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. 1 முதல் 9-ம் வகுப்புவரை மே 13-ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. தேர்வுகள் எழுதியிருந்தாலும் இவர்கள் அனைவரும் ஆல்பாஸ் என்று தமிழக அரசு அறிவித்தது.
விடுமுறையை மாணவர்கள் சந்தேசத்துடன் கழித்தனர். ஒரு மாதத்துக்கு பிறகு தமிழகத்தில் இன்று எல்கேஜி முதல் 10-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவ- மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றனர். அவர்களை ஆசிரியர்கள் இன்முகத்துடன் வரவேற்றனர். அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு இன்று முதல் பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 20-ம் தேதியும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 27-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடக்க உள்ளது.
தனியார் பள்ளிகளை பொறுத்தவரை கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் இன்று வழங்கப்படுகிறது. பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். இருந்தாலும் தங்கள் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்ற ஆவலுடன் கடன்களை வாங்கி பள்ளிக் கட்டணங்களை செலுத்தி வருகின்றனர்.