அரசுப் பள்ளி மாணவர்களுக்காக ஓர் இணைய வானொலி!


ஆன்லைன் வானொலியில் பாடம் கேட்கும் மாணவர்கள்...

காசிருப்பவர்களுக்கு கல்வி கற்க ஆயிரம் வழிகள் திறந்திருக்கின்றன. இல்லாதவர்கள் தான் தங்களுக்கான வழியைத்தேடி அலைகிறார்கள். அப்படிப்பட்ட ஏழை மாணவர்களுக்காகவே இணைய வழி கல்வி வானொலியை நடத்தி வருகிறார் அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர்.

கடலூர் மாவட்டம், புவனகிரி ஒன்றியம், கத்தாழை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் இடைநிலை ஆசிரியர் ஆ.கார்த்திக்ராஜா. 2012-ம் ஆண்டு முதல்முதலாக நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்த கார்த்திக்ராஜா, ஆசிரியப் பணியில் மிகுந்த ஆர்வமுடையவர். அந்த ஆர்வமே அவரை கல்வி வானொலியைத் தொடங்க வைத்திருக்கிறது.

அதிமுக ஆட்சியில் தமிழக அரசால் கல்வி தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டபோது இவருக்குள் சிந்தனை உதித்தது. கல்வி தொலைக்காட்சி இருப்பதுபோல ஏன் கல்வி வானொலி துவங்கக்கூடாது என்று யோசித்தவர், கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அதற்கு செயல்வடிவம் கொடுத்தார். அப்போது கரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நேரம். அதனால் மாணவர்கள் பள்ளிக்கு வர முடியவில்லை.

மாணவர்களுக்கு ஒளித்திரை மூலம் பாடம் நடத்தும் கார்த்திக்ராஜா...

ஆண்ட்ராய்டு அலைபேசி இல்லாதவர்கள் ஆன்லைனில் கல்வி கற்க முடியாது. அவர்களுக்கு ஒரு சாதாரண பிரவுசர் மட்டும் இருக்கும் எளிய அலைபேசி இருந்தால், அதன் மூலமாக கல்வி வானொலியை பெற்றுவிட முடியும் என்பதை மனதில்வைத்து அதற்கேற்ப தனது இணைய வானொலியை வடிவமைத்தார் கார்த்திக்ராஜா. முதலில் தன்னுடைய வகுப்பான நான்காம் வகுப்பு பாடங்களை வானொலியில் பதிவிட்டார். வகுப்பறையில் இருந்த மாணவர்கள் பலரது வீட்டிலும் சாதாரன பிரவுசர் கொண்ட அலைபேசிகள் இல்லாத நிலையில் அந்த மாணவர்கள் வானொலியைக் கேட்க இயலாத நிலை இருந்தது. அதனால் 16 மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் அலைபேசிகளை வாங்கிக்கொடுத்து வானொலியை தொடர்ந்தார்.

அதன்மூலம் கல்விகற்ற மாணவர்களிடம் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டது. இதனை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்ததைப் பார்த்துவிட்டு மற்ற பள்ளிகளில் இருந்தும் நான்காம் வகுப்பு மாணவர்கள், ஆசிரியர்கள் அதில் இணைந்தனர்.

அதன் பிறகு பல ஆசிரியர்கள், “நான்காம் வகுப்பு மட்டும்தானா... மற்ற வகுப்புக்களுக்கு கிடையாதா?” என்று கேள்விகேட்க ஆரம்பித்தனர். நிலைமையை புரிந்து கொண்டார். ஆனால் அத்தனை வகுப்புக்களுக்கும், பாடங்களுக்கும் பாடம் நடத்த தன்னார்வம் மிக்க ஆசிரியர்கள் வேண்டுமே என்ற தயக்கத்தில் இருந்தார். ஆனால் ஆசிரியர்கள் பலரும் இந்த முயற்சியில் தானாகவே இணைந்தனர்.

சான்று பெற்ற மாணவர்கள்...

அதன் விளைவாக ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான அனைத்து வகுப்புகளுக்கும், அனைத்து பாடங்களையும் கல்வி வானொலியில் ஒலிபரப்ப ஆரம்பித்தார்கள். இது அட்டவணைப் படி ஒலிபரப்பாகிறது. அட்டவணைப்படி பாடம் கேட்க முடியாவிட்டாலும் பரவாயில்லை. 24 மணி நேரமும் எப்போது வேண்டுமானாலும் இணையத்திலிருந்து பாடங்களை கேட்டுக்கொள்ளலாம். இதன்மூலம் மாணவர்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப, தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது பாடங்களை கேட்டுக்கொள்ள முடிகிறது. குறிப்பிட்ட பாடத்தை வகுப்பில் படித்துவிட்டு வந்து மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்காகவும் இதை கேட்டுக்கொள்ளலாம்.

தற்போது தமிழகம் முழுவதும் உள்ள 175-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இந்த இணைய வானொலியில் இணைந்திருக்கின்றனர். அவர்கள் தங்கள் அலைபேசியில் குரல்பதிவு மூலம் பாடங்களை நடத்தி, அதனை கார்த்திக்ராஜாவுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அதனை அட்டவணைப்படி இணையத்தில் பதிவேற்றுகிறார் கார்த்திக்ராஜா. இதற்காக பள்ளி நேரம் முடிந்த பிறகு தினமும் நான்கைந்து மணி நேரம் தனியாக உழைக்கிறார். ஆசிரியர்கள் பாடம் நடத்துவதோடு மட்டுமல்லாமல் மாணவர்களும் இதில் பங்கேற்க முடியும் என்பதுதான் தனிச்சிறப்பு. ‘மின்மினிகள் மின்னும் நேரம்’ என்ற தலைப்பில் மாணவர்கள் கல்வி சம்பந்தமானவற்றை பகிர்ந்து கொள்ள இணைய வானொலியில் வழி செய்திருக்கிறார் கார்த்திக்ராஜா.

கார்த்திக்ராஜா

அப்படி இதுவரை 6000 மாணவர்கள் இதில் பங்கேற்று 60 ஆயிரம் பதிவுகளை அளித்திருக்கின்றனர். மொத்தம் 40 ஆயிரம் மணி நேரம் இந்த வானொலி மாணவர்களால் கேட்கப்பட்டிருக்கிறது. அப்படி பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களும் அனுப்பி வைக்கப்படுகிறது.

கார்த்திக்ராஜாவின் இந்த முயற்சியைப் பாராட்டி தனிப்பட்ட முறையில் அவருக்கு கடிதம் எழுதி இருக்கும் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு, ‘ஆசிரியர் கார்த்திக்ராஜா கல்வி ரேடியோ என்னும் இணையதளத்தை உருவாக்கி, அதில் ஆர்வமுள்ள பள்ளி ஆசிரியர்களை ஒன்றாக இணைத்து, ஓராண்டிற்கும் மேலாக மாணவர்கள் கேட்டுக்கொண்டே கற்பதற்கும், எழுதுவதற்கும் ஏற்பாடு செய்திருக்கின்றார். இது மேலும் பல ஆண்டுகள் தொடர்ந்து, கல்வி கற்பித்தலில் இன்னும் பல புதுமைகளை புகுத்திடவும், மாணவர்களின் கல்வித்திறனை வளர்க்கவும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய கார்த்திக்ராஜா, ‘’இந்த வானொலிக்காக எந்த செயலியையும் மாணவர்கள் பதிவிறக்கம் செய்யத் தேவையில்லை. அதற்கான லிங்க் மூலம் உள்ளே செல்லலாம். தினமும் 100 முதல் 200 எம்.பி வரை மட்டுமே இதற்கு டேட்டா செலவாகும். மாணவர்கள் கணினி, அல்லது அலைபேசி திரையை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லாததால் பார்வை குறைபாடு ஏற்பட வாய்ப்பே இல்லை. மனதைக் கெடுக்கும் எந்த ஆபாச விஷயங்களும் இதில் கிடையாது. எந்த விளம்பரங்களும் கிடையாது. விடுகதைகள், நீதிக்கதைகள் ஆகியவற்றின் மூலம் மாணவர்களின் மனதை நெறிப்படுத்த முடியும்.

புத்தகத்தைப் பார்த்துக்கொண்டே பாடல்களைக் கேட்கலாம் பாடல்களைக் கேட்டுக்கொண்டே எழுதலாம். இதில் பாடப் புத்தகத்தில் உள்ள பாடங்கள், பயிற்சிகள், பாடல்கள், வினா விடை, சொல் வங்கி, புத்தக வாசிப்பு ஆகிய எல்லாமும் இருக்கிறது. அவை தவிர திருக்குறள், பழமொழிகள், நீதிக்கதைகள், விடுகதைகள், நற்சிந்தனைகள், பொது அறிவு தகவல்கள், ஆங்கில இலக்கணம், ஆங்கில பேச்சுப்பயிற்சி ஆகியவையும் இந்த வானொலியில் இடம்பெற்றிருக்கின்றன.

ஆன்லைன் கல்வி முறையில் பிள்ளைகள் பாடத்தை மட்டும் தான் படிக்கிறார்களா என்பதை பெற்றோரால் கவனிக்க முடியாது. ஆனால் இந்த இணையவழிக் கல்வி ரேடியோவில் குரல் பதிவு மட்டும்தான் கேட்கும் என்பதால், விரும்பத்தகாத எதனையும் மாணவர்கள் பார்க்க முடியாது. பாடங்களைக் கேட்கலாம், மாணவன் கேட்பதை பெற்றோரும் கேட்க முடியும். அதன்மூலம் மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்க்க பெற்றோரும் உதவி செய்ய முடியும்.

வானொலி பணியில் கார்த்திக்ராஜா...

இந்த வானொலி மூலம் மாணவன் தனது திறமைக்கு ஏற்ப ஒரு பாடத்தை கற்றுக் கொள்கிறான். இது மெதுவாக கற்கும் மாணவர்களுக்கு பேருதவியாக இருக்கிறது. எங்களின் இந்த முயற்சிக்கு பெற்றோர்கள் தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்தவண்ணம் இருக்கிறது. தமிழக அரசு இன்னும் உதவி செய்தால் இந்த வானொலியை இன்னும் மேம்படுத்தி அனைத்து மாணவர்களுக்கும் இதனை கொண்டுசேர்க்க முடியும்” என்று சொன்னார்.

ஆக்கபூர்வமான இந்த சிந்தனைக்காக கார்த்திக்ராஜாவுக்கு நல்லாசிரியர் விருது கொடுத்து கௌரவித்திருக்கிறது தமிழக அரசு. அதுமட்டும் போதாது. கல்விக்காக இவர் உருவாக்கி இருக்கும் இந்த இணைய வானொலியை மேம்படுத்தி தமிழகம் முழுக்க முழங்கவைக்கத் தேவையான முன்னெடுப்புகளையும் தமிழக அரசு முடுக்கிவிடவேண்டும்.

x