சட்டப் படிப்பு பயின்ற மாற்றுத் திறனாளிகள் நிதயுதவி பெற விண்ணப்பிக்கலாம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு


கோவை: சட்டப்படிப்பு பயின்ற மாற்றுத் திறனாளிகள் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 'கோவை மாவட்டத்தில் 2024-2025-ம் நிதியாண்டிற்கு சட்டப்படிப்பு பயின்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளி பட்டதாரிகள் தங்களை வழக்கறிஞர்களாக பதிவு செய்து கொள்வதற்குரிய கட்டணங்கள் செலுத்துவதற்கும் மற்றும் தேவையான சட்டப் புத்தகங்கள் வாங்கவும் நிதியுதவி வழங்கப்படும்.

மாற்றுத்திறன் சதவீதமானது குறைந்த பட்சம் 40 சதவீதம் அல்லது அதற்கு மேல் இருத்தல் வேண்டும். சட்டப்படிப்பு முடித்து தமிழ்நாடு பார்கவுன்சில் அல்லது புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். தமிழ்நாட்டை வசிப்பிடமாகக் கொண்டு வெளிமாநிலங்களில் சட்டப்படிப்பு படித்திருந்தால் வெளிமாநிலங்களில் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறவில்லை என்பதற்கான உறுதிமொழி சான்று பெற்றிருத்தல் வேண்டும்.

இதே திட்டத்தின் கீழ் வேறு ஒரு துறையிடமிருந்து (பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம்) நிதியுதவி பெறப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். தேசிய அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், சட்டப்படிப்புச் சான்றிதழ், பார் கவுன்சில் பதிவுச் சான்றிதழ் ஆகிய நகல்களுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கோவை- 18. என்ற முகவரிக்கு ஜூலை 21-ம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்.' இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.