எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் திடீர் மூடல்: தமிழக அரசு அறிவிப்பு


அரசுப் பள்ளிகளில் செயல்பட்டு வந்த எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் மூடப்படுவதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை திடீரென அறிவித்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க தயக்கம் காட்டி வந்த பெற்றோர்கள், கரோனாவுக்கு பிறகு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க முன்வந்தனர். கடந்த ஆண்டு மட்டும் 6 லட்சத்துக்கு மேல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்தது. இந்த சேர்க்கையை அதிகரிக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் ஆங்கில வழி கல்வியை ஊக்கப்படுத்தியும் வருகிறது அரசு.

கடந்த 2018-ம் ஆண்டு அரசுப் பள்ளியில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதற்கு பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தனியார் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான ரூபாய் கட்டணமாக வசூலித்து வரும் நிலையில், அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்தது. இதனிடையே, கரோனா வைரஸால் பள்ளிகள் மூடப்பட்டன. மாணவர்களும் கல்வியை ஆன்லைன் மூலம் கற்று வந்தனர். கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஆன்லைன் மூலம்தான் மாணவர்கள் பாடங்களை படித்து வந்தனர். இது பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கடந்த ஆண்டு கடைசியில் பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்களும் மகிழ்ச்சியாக பள்ளிக்கூடத்துக்கு வந்தனர். இதனிடையே, நடப்பு கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் மூடப்படுவதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை திடீரென அறிவித்துள்ளது. இதற்கு மாற்றாக சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அங்கன்வாடி பள்ளிகளில், மழலையர் வகுப்புகள் முறைப்படுத்தப்பட்டு, மேம்படுத்தப்படும் என்றும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்காக பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களும், அவர்கள் ஏற்கெனவே பணியாற்றிய ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளுக்கு செல்வார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த திடீர் நடவடிக்கை பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x