9-ம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளும் ஆல் பாஸ் என்று தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டன. 10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டது. 1 முதல் 9-ம் வகுப்பு வரை குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் படி தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த மாணவர்களுக்கு மே 13-ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டது. அடுத்த வாரம் அதாவது, வரும் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. தற்போது, 10 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான வினாத் தாள்கள் திருத்தப்பட்டு வருகின்றன. இந்த மாதம் கடையில் தேர்வு முடிவுகளை வெளியிட பள்ளி கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில், 9-ம் வகுப்பு இறுதித் தேர்வை எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளும் ஆல் பாஸ் என தமிழக பள்ளி கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது. இது குறித்து முதன்மை கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், 9-ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தேர்ச்சி இல்லை என்று ஆவணங்களில் குறிப்பிடப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரோனா காரணமாக பள்ளிகள் தாமதமாகத் திறக்கப்பட்டது என்றும் தேர்வுகளில் பங்கேற்காத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தி தேர்ச்சியளிக்க வேண்டும் என்றும் நீண்ட நாட்களாக பள்ளிக்கே வராத மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி வழங்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.