அடுக்கடுக்காய் சோகங்களையே சந்தித்து வந்த தனக்கு இப்போதுதான் ஆறுதல் அளிக்கும் வகையில் ஒரு நல்ல காரியம் நடந்திருப்பதாக நினைத்து மகிழ்கிறார் ரமணி. நாற்பத்தைந்து வயதாகும் ரமணி, மயிலாடுதுறை நகராட்சி மீன்மார்க்கெட்டில் மீன்களை வெட்டிச் சுத்தம் செய்துகொடுத்து வருமானம் ஈட்டும் ஓர் ஏழைப்பெண். அவரை தற்போது பலரும் தேடிவந்து பாராட்டிச் செல்கிறார்கள். அப்படி பலரும் பாராட்டும் வகையில் என்ன சாதித்தார் ரமணி?
திருமணமான நான்கே வருடத்தில் கணவனைப் பறிகொடுத்துவிட்டு, இரண்டு குழந்தைகளுடன் திக்குத் தெரியாமல் தவித்த ரமணி, அதிலிருந்து மீண்டு தனது மகளை ரஷ்யாவுக்கு அனுப்பி மருத்துவம் படிக்கவைத்திருக்கிறார். அதற்காகத்தான் அனைவரும் இப்போது அவரைப் பாராட்டுகிறார்கள். ஆனால் அதற்கு ரமணி பட்டிருக்கும் சிரமங்கள், துயரங்கள் எல்லாம் எழுத்துக்குள் அடக்கிவிட முடியாத பெரும் சோகம்.
ரமணியை எட்டாம் வகுப்பு வரையே அவரது பெற்றோரால் படிக்க வைக்க முடிந்தது. வீட்டில் இரண்டு பெண் பிள்ளைகள் என்பதால் இருவரையும் உரிய காலத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்பது பெற்றோரின் எண்ணம். அதனால் அதிகம் படிக்கவைக்கவில்லை. மயிலாடுதுறை ரயில்நிலையம் பகுதியில் கோழி இறைச்சிக்கடை வைத்திருந்த ராஜேந்திரனுக்கு ரமணியை 1993-ல் திருமணம் செய்து கொடுத்தார்கள். அவரும் ரமணியைக் கண்ணுக்கு இமையாகப் பார்த்துக் கொண்டார். இருவரின் அன்புக்கு அடையாளமாக ஆண், பெண் இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்தார்கள்.
ஆனால் இந்தக் குடும்பத்தின் மீது யார் கண்பட்டதோ தெரியவில்லை. நான்கே ஆண்டுகளில் எதிர்பாராத விதமாக கணவனைப் பறிகொடுத்தார் ரமணி. அப்போது அவரது மகன் ரவிச்சந்திரனுக்கு இரண்டே வயதுதான். மகள் விஜயலட்சுமி ஒரு வயதை நெருங்கிக் கொண்டிருந்த கைக்குழந்தை. இப்படி நிராதரவாய் நின்ற மகளை ரமணியின் தாய் தையல்நாயகி ஓடிவந்து அரவணைத்துக் கொண்டார். மீன்மார்க்கெட்டில் மீன் வெட்டிக்கொடுத்து வந்த வருமானத்தை வைத்து மகளையும், பேரக்குழந்தைகளையும் பராமரித்தார் தையல்நாயகி.
தாய் தந்த அடைக்கலத்தாலும், ஆறுதலாலும் சற்றே ஆசுவாசமடைந்த ரமணிக்கு மகன் ரவிச்சந்திரனிடம் ஏற்பட்ட மாற்றம் பதற்றத்தை ஏற்படுத்தியது. நாளுக்கு நாள் கருத்துக்கொண்டே போனான். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் சோதித்துப் பார்த்துவிட்டு ரவிச்சந்திரனுக்கு, ரத்தநாள சுரப்பி குறைபாடு இருப்பதாகச் சொன்னார்கள். இதைக் குணப்படுத்த வழியில்லை. ஆனால், இருக்கும் நிலையிலேயே தொடரலாம் என்று சொன்ன மருத்துவர்கள், வெளிநாட்டில் இருந்து தருவிக்கப்படும் மாத்திரை ஒன்றை அதற்கான மருந்தாக பரிந்துரைத்தார்கள். அந்த மாத்திரையை இன்றுவரை மகனுக்காக வாங்கிக் கொடுத்து வருகிறார் ரமணி. ஒரே ஒரு ஆறுதல், மாத்திரை இப்போது நம் நாட்டிலேயே கிடைக்கிறது.
பிள்ளைகள் வளர ஆரம்பித்ததும் தாயை மட்டும் நம்பி இருக்காமல் தானும் மீன் வெட்டும் கத்தியை கையில் எடுத்தார் ரமணி. அப்படி இருபது ஆண்டுகளுக்கு முன்பு மீன் மார்க்கெட்டுக்குள் போனவரை இன்னமும் வெளியே வரவிடாமல் கடமைகளும் கஷ்டங்களும் போட்டு அழுத்துகின்றன. மீன் வெட்டிக் கொடுப்பதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்தே பிள்ளைகளை படிக்க வைத்தார். ஆனாலும் உடல் நிலை சரியில்லாததால் மகன் ரவிச்சந்திரனால் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்தது. பத்தாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்தாலும் மகள் விஜயலட்சுமி அனைத்திலும் பெஸ்ட்டாக வந்ததால் அவளை மருத்துவம் படிக்கவை என அறிந்தோர் தெரிந்தோர் ரமணிக்கு அட்வைஸ் கொடுத்தார்கள்.
இதனால் மகளை ராசிபுரத்தில் தனியார் பள்ளியில் சேர்த்து பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்புக்களை படிக்க வைத்தார். அங்கே நல்ல முறையில் படித்தாலும் மகளால் மருத்துவ படிப்புக்கான கட் - ஆஃப் எல்லைக்குள் நுழையமுடியவில்லை. அதற்காக சோர்ந்துவிடாத ரமணி, மகளை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இஞ்ஜினீயரிங் படிக்க வைத்தார். இருந்தபோதும் மருத்துவம் படிக்க முடியாமல் போய்விட்டதே என்ற ஆதங்கம் அம்மாவுக்கும், பெண்ணுக்கும் உள்ளுக்குள் அடித்துக் கொண்டே இருந்தது.
இந்த நிலையில் தான், ரமணியிடம் மீன் வெட்டி வாங்கிச் செல்லும் ஒருவர் ரஷ்யாவுக்கு அனுப்பி மருத்துவம் படிக்க வைக்கும் யோசனையைச் சொன்னார். தனக்குத் தெரிந்தவர்கள் மூலம் அதுகுறித்து மேலும் விசாரித்து தகவல்களைத் திரட்டிய ரமணி, மகளை நம்பிக்கையோடு ரஷ்யாவுக்கு அனுப்பி வைத்தார். அந்த நம்பிக்கை பொய்க்காத வகையில் இப்போது மருத்துவம் படித்துவிட்டு நாடு திரும்பியிருக்கிறார் விஜயலட்சுமி.
இனி ரமணி பேசட்டும் கேட்போம். ‘’ரஷ்யாவில் படிக்கவைக்க முதலில் ஏழு லட்சம் ரூபாய் கட்டணும்னு சொன்னாங்க. ஒரு சீட்டு போட்டு வச்சிருந்தேன். கையில கொஞ்சம் பணமும் இருந்துச்சு. அதோட தெரிஞ்சவங்ககிட்ட கொஞ்சம் கடனும் வாங்கினேன். ஏழு லட்சத்தையும் கட்டி, அவளை ஏரோபிளேன்ல ஏத்தி வுட்டப்பத்தான் என் மனசு குளிர்ந்துச்சு. அடுத்தடுத்த வருசம் ஃபீஸு கட்ட ரொம்பவே கஷ்டப்பட்டுட்டேன். சொந்தமா இருந்த வீடு, அவளுக்குன்னு வாங்கி வெச்சிருந்த நகைங்க, அம்மாவோட நகைங்க எல்லாத்தையும் வித்து பணம் கட்டினோம். அதுவும் பத்தல, அக்கம், பக்கம், தெரிஞ்சவங்க, அறிஞ்சவங்க எல்லாத்துகிட்டயும் கடன் வாங்கினோம்.
கடன்பட்டாலும் புள்ள நல்லபடியா படிச்சு முடிச்சிருச்சு. இப்ப மனசு நிம்மதியா இருக்கு. ஆனா, இதுல இன்னும் கொஞ்சம் படிப்பு இருக்காமே... ஹவுஸ் சர்ஜன் செய்யுணுமாமே. அதுக்கு சுமாரா அஞ்சு லட்சம் ருபாய் ஆகும்னு சொல்றாங்க. இப்பவே எல்லாத்தையும் இழந்தாச்சு. பத்து லட்சம் ரூபாய்க்கும் மேல கடன் இருக்கு. எப்படியாவது அதையும் நல்லபடியா முடிச்சு அவள டாக்டரா உட்கார வைக்கிற வரைக்கும் மனசு பதைச்சுகிட்டுத் தான் இருக்கும். எல்லாத்துக்கும் நல்லது செய்யுற நம்ம முதல்வர் ஐயா மனசு வைச்சு எதாவது ஒரு மெடிக்கல் காலேஜுல ஹவுஸ் சர்ஜன் சேர்த்து விட்டாங்கன்னா, மேற்கொண்டு கடன் வாங்காம படிச்சுடுவா” என்று பெருமூச்சு விட்டார் ரமணி.
“என்ன இருந்தாலும் மகள் இன்னொரு இடத்துக்கு வாழ்க்கைப்பட்டுப் போகும் பெண். மருத்துவராகி பொருளீட்டினால் அது எந்தளவுக்கு உங்களுக்கு கைகொடுக்கும் என்று நிச்சயமாய் சொல்லமுடியாது. அப்படி இருக்கையில் உங்களது தேவைகளைப் பற்றியும் மகனின் எதிர்காலம் பற்றியும் கவலைப்படாமல் மகளின் படிப்புக்காக இப்படி அனைத்தையும் விற்றுவிட்டு கடனாளியாக நிற்கிறீர்களே..?” என்று நாம் கேட்டதற்கு, ‘’இன்னும் என் உடம்புல தெம்பு இருக்கு. அதை வச்சி உழைச்சு மீதியிருக்கிற காலத்தை ஓட்டிக்குவேன். அதுமட்டுமில்லாம, அவளுக்குன்னு வாங்கி வெச்ச நகைங்களத் தானே அவளுக்காக வித்து செலவழிச்சுருக்கோம். அதுக்குப் பதிலா என்னைக்கும் அழியாத படிப்பை அவளுக்குக் குடுத்துருக்கோமே. அதை வச்சி அவ பொழைச்சுக்குவா, அவளோட அண்ணனையும் நல்லா பார்த்துக்குவா. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு” என்று அழுத்தமான நம்பிக்கையுடன் சொன்னார் ரமணி.
டெய்ல் பீஸ்: இந்த நிலையில், கடந்த வாரம் டெல்டா பகுதிகளுக்கு விசிட் வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ரமணியின் கதையைக் கேட்டு வியந்து அவரையும் அவரது பிள்ளைகளையும் திருக்கடையூருக்கு நேரில் வரவழைத்து வாழ்த்துச் சொன்னார். வாழ்த்துகளோடு சேர்த்து விஜயலட்சுமியின் மருத்துவக் கனவு முழுமையடையவும் நல்லதொரு வழியைக் காட்டட்டும் நம் முதல்வர்.