`சந்திராயன் 3ஐ செயல்படுத்த உள்ளோம்': இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்


``சந்திராயன் 2 திட்டம் தோல்வி குறித்து பல்வேறு ஆய்வுகளில் மேற்கொண்டு, சந்திராயன் 3-ல் முன்பு ஏற்பட்ட தோல்வி எதுவும் ஏற்படாத வண்ணம் செயல்படுத்த உள்ளோம்'' என முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

மதுரை மாவட்டம், சிந்தாமணி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் இஸ்ரோ அமைப்பின் முன்னாள் தலைவர் டாக்டர் சிவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் சிறப்புரையாற்றிய சிவன், "உலகில் முதன்முதலில் ராக்கெட் பயன்படுத்தியது இந்தியர்கள் தான்.

பிரிட்டிஸாரை எதிர்த்து நடைபெற்ற மைசூர் போரில் திப்பு சுல்தான் ராக்கெட் ஏவுகணையை பயன்படுத்தினார். அதன் பின் ராக்கெட் ஏவுகணை தொழில்நுட்பத்தை மேம்படுத்தியது ஐரோப்பிய நாடுகள்" என்றார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "சந்திராயன் 2 திட்டம் தோல்வி குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டு, அடுத்தகட்டமாக சந்திராயன் 3-ல் முன்பு ஏற்பட்ட தோல்வி எதுவும் ஏற்படாத வண்ணம் செயல்படுத்த உள்ளோம். மங்கள்யான் திட்டம் குறித்த பல்வேறு ஆய்வுகளை முடித்து அதற்கான திட்டங்களை தயார் செய்துள்ளோம்" என்றார்.

மேலும், "குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான இடம் கையகப்படுத்தும் பணிகள் 70% முடிந்துவிட்டது. மொத்தம் 2 ஆயிரத்து 200 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. அதில், 1250 ஏக்கர் நிலங்கள் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. அந்தத் திட்டம் முடிவடையும் போது நல்ல ஒரு திட்டமாக இருக்கும். ஒவ்வொரு துறையிலும் இளைஞர்களை பயன்படுத்தினால் உலகளவில் இந்தியாவை எங்கோ எடுத்துச் செல்லலாம். இளைஞர்கள் வேலையைத் தேட கூடாது அவர்களே உருவாக்க வேண்டும்.

இஸ்ரோ சார்பாக பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பது சம்பந்தமாக சமீபத்தில் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். அது மிகப்பெரும் வெற்றியடைந்தது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்தை சேர்ந்த மாணவர்களும் அதில் பங்கேற்பார்கள்'' என்றார்.

x