`என் குடும்பத்தைவிட ஜீப் மேல்தான் நேசம் அதிகம்'- ஓய்வுபெற்ற ஓட்டுநரின் உருக்கம்


ஜீப்புடன் சக்கரபாணி

பணி ஓய்வு பெற்ற ஓட்டுநரை அமரவைத்து, ஜீப்பை ஓட்டி சென்ற முதன்மை கல்வி அலுவலரின் செயல் பலராலும் பாராட்டைப் பெற்று வரும் நிலையில் அந்த பெருமையை பெற்ற ஓட்டுநரின் அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

சக்கரபாணியை ஜீப்பில் அமரவைத்து ஓட்டிச்செல்லும் கிருஷ்ணபிரியா

விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக கிருஷ்ணபிரியா என்பவர் பணிபுரிந்து வருகிறார். அந்த அலுவலகத்தில் ஓட்டுநராக பணியாற்றும் சக்கரபாணி அந்த அரசு வாகனத்தை தனது சொந்த வாகனத்தைப் போல பராமரித்து வந்தார். தினந்தோறும் காலையில் ஜீப்பை தவறாமல் கழுவி, துடைத்து காற்று, பிரேக் சரியாக இருக்கிறதா என்று சரிபார்த்து தான் வண்டியை எடுப்பார். மாலையில் வண்டியை நிறுத்தும்போது சூடம் காட்டி படைத்து விட்டுத்தான் கிளம்புவார். அந்த வாகனத்தை மிகவும் நேசித்தவர்.

இது மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியாவுக்கும் நன்கு தெரியும். இந்த நிலையில் ஓட்டுநர் நேற்று முன்தினம் பணி ஓய்வு பெற்றார். அவரை கவுரவிக்கும் விதமாக முதன்மைக் கல்வி அலுவலர் அமரும் இடத்தில் சக்கரபாணியை அமரவைத்து கிருஷ்ணபிரியா ஜீப்பை வீட்டுக்கு ஓட்டிச் சென்றார். இந்த தகவல் அந்த அலுவலகத்தில் இருந்த யாரோ ஒருவர் இன்று பதிவிட அது தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது.

இதுகுறித்து ஓட்டுநர் சக்கரபானியிடம் பேசினேன். "எனக்கு குடும்பம், தெய்வம் எல்லாவற்றையும்விட வண்டி தாங்க முக்கியம். அந்த வண்டி இல்லன்னா நம்மை யார் மதிப்பா. நமக்கு மரியாதையும் உழைப்பையும் தருகிற அந்த வண்டியை மதிக்கணும் என்பது என்னுடைய எண்ணம். அதுமட்டுமில்லாமல் இந்த வேலைக்கு வருவதற்கு முன்பு நான் கார் ஓட்டிக் கொண்டிருந்தேன். காரை அப்படி சுத்தமாக நன்கு கவனித்து பராமரித்து கொள்வேன். அதைப்போல இந்த வண்டியையும் சுத்தமாக பராமரித்து வந்தேன். இதற்காக எல்லா உயர் அதிகாரிகளுமே என்னை பாராட்டுவார்கள்.

அரசு அலுவலகங்களுக்கு புதிய ஜீப் வழங்கும்போது அந்த ஜீப்பை பெறுகிறவர்களில் நிச்சயம் நானும் ஒருவராக இருப்பேன். திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு கையாலும், அதிமுக ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதா கையாளும் நான் வாகனத்தின் சாவியை வாங்கியிருக்கிறேன்.

சக்கரபாணி

என்னுடைய தனிப்பட்ட சொந்த வாகனத்தை பராமரிப்பதை விட அதிக அளவு நேசத்தோடு இதை பராமரித்து வந்திருக்கிறேன். அதனால்தான் மேடம் அவர்களே என்னை வீட்டில் விடுவதாக சொன்னார்கள். ஆனால் நான் அதுவரை அவர்களை ஓட்ட அனுமதிக்கவில்லை. சிறிது நேரத்திற்கு பிறகு வழக்கம்போல் நானே ஓட்டி சென்றேன். இந்த அனுபவம் எனது பணிக்கு கிடைத்த பெரிய வெகுமதியாக கருதுகிறேன்" என்றார்.

x