முதன்மை கல்வி அலுவலர்கள் 3 பேருக்கு கூடுதல் பொறுப்பு: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு


சென்னை: பள்ளிக்கல்வித் துறையில் அதிகாரிகள் பணி ஒய்வு காரணமாக 3 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு: வயது முதிர்வு காரணமாக கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி எல்.சுமதி, கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி கே.பழனி, மயிலாடுதுறை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி பி.அம்பிகாபதி ஆகியோர் நேற்றுடன் பணி ஒய்வுபெற்றனர்.

இதையடுத்து நிர்வாக பணிகள் சுணக்கமின்றி நடைபெறுவதற்காக அந்த இடங்களை அருகே உள்ள முதன்மைக் கல்வி அலுவலர்கள் கூடுதல் பொறுப்பாக கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

அதன்படி விழுப்புரம்முதன்மைக்கல்வி அதிகாரி ஆர்.அறிவழகன், கடலூர் மாவட்டத்தையும், திருச்சி முதன்மைக்கல்வி அதிகாரி கே.கிருஷ்ணபிரியா, கரூர் மாவட்டத்தையும், நாகப்பட்டினம் முதன்மைக் கல்வி அதிகாரி எம்.கே.சி.சுபாஷினி, மயிலாடுதுறை மாவட்டத்தையும் நிதி அதிகாரத்துடன் கூடிய முழு கூடுதல் பொறுப்புடன் கவனித்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த 2 மாதங்களில் மட்டும் 7 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணி ஒய்வு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.