அரசு மாதிரி பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையில் குழப்பம் - சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் முற்றுகை


அரசு மாதிரி பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை முறையை கண்டித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள், பெற்றோர்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை முறையை கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தை மாணவர்கள், பெற்றோர் முற்றுகையிட்டனர்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த நந்தகுமார் 2013-ம் ஆண்டு அங்கு ‘எலைட்’ பள்ளியை உண்டு உறைவிடத்துடன் ஏற்படுத்தினார். இங்கு 10-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறந்த ஆசிரியர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. இதனால் பலருக்கும் மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்தது. இதனால் அப்பள்ளிக்கு அதிக வரவேற்பு கிடைத்தது.

அதன்பின், நந்தகுமார் பள்ளிக் கல்வி ஆணையராக இருந்தபோது ‘எலைட்’ போன்ற மாதிரி பள்ளியை மாவட்ட வாரியாக தொடங்கினார். அதன்படி மூன்று ஆண்டுகளுக்கு முன், சிவகங்கை மாவட்டத்தில் கீழக்கண்டனியில் இப்பள்ளி தொடங்கப்பட்டது. இங்கு ஆண்டுதோறும் 10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்த 200 மாணவர்கள் ‘கட்ஆப்’ இன சுழற்சி அடிப்படையில் சேர்க்கப்பட்டு வந்தனர்.

இதில் அதிக மதிப்பெண்கள் பெற்ற காரைக்குடி ராமநாதன் செட்டியார் உயர்நிலைப் பள்ளி, திருப்பத்தூர் அருகே தி.புதுப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளிட்ட சில பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களே அதிகளவில் சேர்ந்தனர். இதனால் மற்ற அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு இடம் கிடைக்காத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து இந்தாண்டு ஒவ்வொரு அரசு பள்ளியில் இருந்தும் தலா 4 மாணவர்களை மட்டுமே ‘எலைட்’ பள்ளியில் சேர்க்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டது. இதனால் தி.புதுப்பட்டி அரசு பள்ளியில் 450 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த பலருக்கும் இடம் கிடைக்காதநிலை ஏற்பட்டது.

இதையடுத்து இடம் கிடைக்காத மாணவர்கள், அவரது பெற்றோர் நேற்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்துவிடம் மனு கொடுத்தனர்.

அவர்கள் கூறியதாவது: அதிக மதிப்பெண்கள் எடுத்த அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி அளித்து நீட், ஜேஇஇ தேர்வுகளில் வெற்றி பெற வைக்கவே மாதிரி பள்ளிகள் தொடங்கப்பட்டன. ஆனால், தற்போது பள்ளிக்கு 4 பேர் என்று கூறி 400-க்கும் குறைந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களைக்கூட சேர்த்துள்ளனர். ஆனால் 480 மதிப்பெண் எடுத்த மாணவருக்கு கிடைக்கவில்லை. இதனால் பலரது மருத்துவ, ஐஐடி படிப்பு கனவு பறிபோகும் நிலை உள்ளது.

மேலும் நீட், ஜேஇஇ தேர்வுகளில் மதிப்பெண்கள் அடிப்படையில்தான் மாணவர்களை தேர்வு செய்ய உள்ளனர். அப்படி இருக்கையில் பள்ளி அடிப்படையில் தேர்வு செய்து மாதிரி பள்ளி நோக்கத்தையே வீணடித்து விட்டனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது ‘‘ மாணவர்கள் சேர்க்கையை அரசே முடிவு செய்கிறது. அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காக மாணவர்கள் சேர்க்கையில் மாற்றம் செய்துள்ளது’’ என்று கூறினர்.