தமிழகத்தில் தொழிற்கல்வி பணியிடங்கள் நிரப்பப்படும்: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தகவல்


விழுப்புரம் அருகே மாம்பழப்பட்டு கிராமத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

விழுப்புரம்: தமிழகத்தில் தொழிற்கல்வி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து மாம்பழப்பட்டு, ஒட்டன்காடுவெட்டி கிராமங்களில் இன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் "அரசுப் பள்ளிகளில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அதிக எண்ணிக்கையில் காலியாக உள்ளதே என்ற கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ''ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வெழுதி 2,222 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்காக காத்திருக்கிறார்கள். சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, இந்த மாத இறுதிக்குள் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். தற்போது அரசுப் பள்ளிகளில் பணி நிரவல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர்களின் எண்ணிக்கையை விட அதிக எண்ணிக்கையில் பணிபுரியும் ஆசிரியர்கள், தேவைப்படும் பள்ளிக்கு பணி நிரவல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

வழக்கமாக ஆகஸ்ட் 1-ம் தேதி தான் அரசுப் பள்ளிகளில் எத்தனை மாணவர்கள் சேர்ந்திருக்கின்றனர், எத்தனை ஆசிரியர்கள் தேவை என்ற கணக்கு எடுக்கப்படும். பேராசிரியர் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கூடுதல் பள்ளிக் கட்டடங்களுக்காக ரூ.7,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 18 ஆயிரம் வகுப்பறைகளைக் கட்டத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிதியாண்டில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட ரூ.3,497 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். 3604 கூடுதல் வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

மேலும் 3,500 வகுப்பறைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் 1,000 கோடி ரூபாயில் 4,729 வகுப்பறைகள் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் முடிந்தால் ஒவ்வொரு பள்ளியும் தன்னிறைவு பெற்ற பள்ளியாகத் திகழும். 453 பள்ளிகளில் தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும். அதற்கான ஆய்வகங்கள் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.

அப்போது விழுப்புரம் எம்.எல்.ஏ லட்சுமணன், ஒன்றியச் செயலாளர்கள் கல்பட்டு ராஜா, தங்கம், விசுவநாதன், விழுப்புரம் நகர்மன்ற உறுப்பினர் மணவாளன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.