தமிழக மாவட்டங்கள், ஜோதிட நட்சத்திரங்கள், பரதநாட்டிய முத்திரைகள்: சொல்லி அசத்தும் ஐந்து வயது சிறுமி!


ஐந்து வயது சிறுமி ரெனிட்டா ஜாஸ்மின்

தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்கள், ஜோதிடத்தில் உள்ள 27 நட்சத்திரங்களின் பெயர்கள் மற்றும் பரதநாட்டியத்தில் உள்ள ஒற்றை கை, இரட்டை கை முத்திரைகள் ஆகியவற்றின் சமஸ்கிருத பெயர்களை மூச்சு விடாமல் ஒப்பிக்கிறார் ஐந்து வயது சிறுமி ரெனிட்டா ஜாஸ்மின்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள வடமதுரையைச் சேர்ந்த சுமித்ராஜா-ரூபி தம்பதியினரின் மகள் ரெனிட்டா ஜாஸ்மின். ஐந்து வயது சிறுமியான இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் யூகேஜி படித்து வருகிறார்.

இவர், தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களின் பெயர்களையும் கடகடவென 30 நொடிகளில் தனது மழலை குரலில் சொல்லி விடுகிறார். அதேபோல், ஜோதிடத்தில் உள்ள 27 நட்சத்திரங்களின் பெயர்கள், பரதநாட்டியத்தில் உள்ள 28 ஒற்றை கை மற்றும் 24 இரட்டை கை முத்திரைகளின் சமஸ்கிருத பெயர்கள் போன்றவற்றை மூச்சுவிடாமல் ஒப்புவித்து கேட்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார்.

அதுமட்டுமின்றி தான் பயிலும் பள்ளியில் இறை வணக்கத்தின் போது (Prayer) யூகேஜி படிக்கும் சிறுமியான ரெனிட்டா ஜாஸ்மின் தான் தேசிய உறுதிமொழியை கூறி வருகிறார். இது அந்த பகுதி பொதுமக்களை மட்டுமின்றி பள்ளி ஆசிரியர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அதுமட்டுமன்றி கண்டங்கள், பெருங்கடல்களின் பெயர்கள் என்று கற்கும் அனைத்தையும் ஒரு சில நிமிடங்களில் மனப்பாடம் செய்து மறு நிமிடமே தவறில்லாமல் கூறும் திறனை பெற்றுள்ளார். படிப்பு மட்டுமின்றி ஆடல், பாடல் என அனைத்து துறைகளிலும் திறமையை வெளிப்படுத்தி வடமதுரை பகுதி பொதுமக்களின் செல்லப் பிள்ளையாக திகழ்ந்து வருகிறார் இந்த 5 வயது சிறுமி.

x