பெற்றோர் ஆசிரியர் கழக இணைப்புத் தொகை ஜூலை 20-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்: கல்வித்துறை உத்தரவு


பள்ளிக்கல்வித் துறை

சென்னை: பெற்றோர் ஆசிரியர் கழகத்துக்கான இணைப்புத் தொகையை பள்ளிகளிடம் இருந்து பெற்று ஜூலை 20-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை தலைவராக கொண்டு தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் சென்னையில் உள்ள டிபிஐ வளாகத்தில் இயங்கி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளிடம் இருந்து இணைப்புக் கட்டணத் தொகையை முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் பெற்று, அந்த தொகையை ஒரே வங்கி வரைவோலையாக பெற்றோர் ஆசிரியர் கழகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதற்கிடையே சமீபத்தில் நடத்தப்பட்ட பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் இணைப்புத் தொகையை மறுநிர்ணயம் செய்வதற்கு தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் பெறப்பட்டது.

அதன்படி தொடக்கப் பள்ளிகளுக்கு ரூ.150-ல் இருந்து ரூ.100 ஆகவும், நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.225-ல் இருந்து, ரூ.200 ஆகவும் இணைப்புத் தொகையானது தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளிடம் இருந்து இணைப்புத் தொகையை பெற்று அவற்றை சென்னையில் மாற்றத்தக்க வகையில் டி.டி.,யாக எடுத்து ஜூலை 20-ம் தேதிக்குள் தாமதமின்றி அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

x