சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலையில் வெளியீடு!


10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை ஜூலை மாதம் வெளியிட சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. இரண்டு கட்ட தேர்வு முடிவுகளையும் ஒருங்கிணைத்து இறுதி மதிப்பெண் வெளியிடப்படுகிறது.

நடப்பு ஆண்டுக்கான 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை கரோனா பரவலால் 2 கட்டங்களாக நடத்துவதற்கு சிபிஎஸ்இ முடிவு செய்தது. அதன்படி, முதல்கட்ட தேர்வு கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து 2-ம் கட்டத் தேர்வு ஏப்ரல் 26-ம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகின்றன. இந்தத் தேர்வுகள் 10-ம் வகுப்புக்கு மே 24-ம் தேதியும், 12-ம் வகுப்புக்கு ஜூன் 15-ம் தேதியும் முடியவடைய உள்ளன. இந்நிலையில், தேர்வு முடிவுகளை ஜூலையில் வெளியிடுவதற்கு சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து சிபிஎஸ்இ மண்டல அதிகாரிகள் சிலர் கூறுகையில், "10, 12-ம் வகுப்பு 2-ம்கட்டத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு திருத்துதல் பணிகளை துரிதமாக முடித்து தேர்வு முடிவை ஜூலையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு ஆசிரியர்களும் முன்பைவிட கூடுதலாக தினமும் 35 விடைத்தாள்களை திருத்தி வருகின்றனர். அதேநேரம் கூடுமானவரை விடைத்தாள்களை 2 முறை மதிப்பீடு செய்யவும்ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்விரு கட்ட தேர்வுமுடிவுகளையும் ஒருங்கிணைத்து இறுதி மதிப்பெண் வெளியிடப்படும்" என்றனர்.

x