‘இருட்டறை தேர்வு’ செய்தி எதிரொலி: வெளிச்சம் பாய்ச்சிய சமூக ஆர்வலர்கள்!


அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, குரோம்பேட்டை

சென்னை குரோம்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மின்விசிறி, மின்விளக்கு இல்லாமல் மாணவர்கள் தேர்வு எழுதுவதாக நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம். இதைத் தொடர்ந்து அப்பள்ளிக்கு சமூக ஆர்வலர்கள் மின்விளக்கு, மின்விசிறி ஆகியவற்றைக் கொடுத்து நேசக்கரம் நீட்டி இருக்கிறார்கள். இது பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

சமூக ஆர்வலர் சந்தானம்,

இது குறித்து குரோம்பேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வி. சந்தானம் கூறுகையில் ” தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5-ம் தேதியும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6-ம் தேதியும் தேர்வுகள் தொடங்கின. குரோம்பேட்டை அரசுப் பள்ளியில் உள்ள 28 அறைகளில் எட்டு தேர்வு அறையைத் தவிர மற்ற அறைகளில் மின்விசிறியும் இல்லை; மின்விளக்கும் இல்லை. இருளும், புழுக்கமும் சேர்ந்து தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்தை சிதைக்கின்றன. தொகுதி எம்எல்ஏ, எம்பி ஆகியோர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தேன். இதுகுறித்து செய்த காமதேனு மின்னிதழில் நேற்று வெளியானது. இதைத் தொடர்ந்து, ஸ்ரீ ரங்கராமானுஜ சேவா ட்ரஸ்ட், சேவா பாரதி ட்ரஸ்ட், ரதி பவுண்டேஷன் மற்றும் டாக்டர் ரவிச்சந்திரன் என்ற தனிநபர் உள்ளிட்டோர் சுமார் 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மின்விசிறி மற்றும் மின்விளக்கு ஆகியவற்றைப் பள்ளிக்கு நன்கொடையாக அளித்திருக்கிறார்கள். இன்று காலை பள்ளியின் தலைமை ஆசிரியர் லதா சாந்தி அவர்களிடம் ஒப்படைத்தோம். அந்த மின்சாதன பொருட்களைப் பொருத்த மூன்று எலக்ரீஷியனையும் பணியமர்த்தியுள்ளோம். தற்போது விறுவிறுப்பாக வேலைகள் நடைபெற்று வருகின்றன.

பள்ளிக்கு மின்சாதனங்கள் நன்கொடை

இந்த முயற்சிக்குத் துணை நின்ற காமதேனு மின்னிதழுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் மாணவர்களுக்கு குடிநீர் பிரச்னை இருக்கிறது. அடுத்த கட்டமாக இதையும் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பள்ளிக்கு மின்சாதனங்கள் நன்கொடை

தொகுதி எம்எல்ஏ கருணாநிதி மற்றும் எம்பி டி.ஆர். பாலு ஆகியோர் பள்ளியை ஆய்வு செய்ய வேண்டும். அப்போதுதான் இது போன்ற குறைகளைச் சரி செய்ய முடியும் ” என்றார்.

x