‘அறிவியல் உருவோக்குவோம்’ சர்வதேச போட்டி: பரிசு வென்ற புதுச்சேரி, காரைக்கால் அரசுப் பள்ளிகள்


புதுச்சேரி: அறிவியல் உருவாக்குவோம் சர்வதேச செயல்திட்டப் போட்டியில் பாரீஸ் பல்கலைக்கழகத்தின் பரிசை புதுச்சேரி, காரைக்காலிலுள்ள 4 அரசு பள்ளிகள் பெற்றன. இதில் முதல் பரிசை பூரணாங்குப்பம் அரசு நடுநிலைப்பள்ளி வென்றது.

புதுச்சேரி அறிவியல் இயக்கம், கல்வித்துறையின் மாநில பயிற்சி மையம் மற்றும் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் பல்கலைக்கழகம் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் அறிவியல் உருவாக்குவோம் சர்வதேச செயல்திட்ட போட்டியை நடத்தி வருகிறது. 2023 - 24-ம் ஆண்டுக்கான 17வது செயல் திட்ட ஆராய்ச்சி போட்டியில் 40-க்கும் மேற்பட்ட செயல்திட்ட முன்மொழிவுகள் பிரான்ஸ் நாட்டிலுள்ள பாரீஸ் பல்கலைக் கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பல்கலைக்கழகத்தால் 12 செயல் திட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு பள்ளி மாணவர்களை வழிகாட்டி ஆசிரியர்களுடன் ஆராய்ச்சி செயல்திட்டங்களை செய்திட தேர்வு செய்தது.

அதன்படி புதுச்சேரி, காரைக்கால் அரசுப் பள்ளி மாணவர்கள் செய்த 12 செயல் திட்டங்கள் காணொலி காட்சிகளாக பதிவு செய்தும், அறிக்கைகளாகவும் அஞ்சல் வழியாக பிரான்ஸுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட இந்த 12 செயல் திட்டங்களை பாரீஸ் பல்கலைக்கழகத்தினர் மதிப்பீடு செய்து இன்று வீடியோ கான்ப்ரன்ஸ் வழியாக தேர்வு செய்தோரை அறிவித்தனர். அதன்படி முதல் பரிசை பூரணாங்குப்பம் அரசு நடுநிலைப்பள்ளி வென்றது. வழிகாட்டி ஆசிரியர் மேகலாதேவி மற்றும் பள்ளி சிறார்கள் கவுரவிக்கப்பட்டனர். அவர்களுக்கு இந்திய மதிப்பில் ரூ. 18 ஆயிரம் பரிசு தரப்படும்.

இரண்டாமிடத்தை மூன்று அரசுப் பள்ளிகள் வென்றன. அதன்படி இந்தப் பரிசை வென்ற காரைக்கால் கோவில் பத்து அரசு உயர்நிலைப்பள்ளி, புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மேல் நிலைப்பள்ளி, காரைக்கால் கோவில்பத்து தந்தை பெரியார் அரசு மேல் நிலைப்பள்ளி ஆகிய 3பள்ளிகளுக்கு தலா ரூ. 6 ஆயிரம் தரப்படும்.

பள்ளிக்கல்வித் துறை வளாகத்தில் நடந்த இந்நிகழ்வில் பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி, மாநில பயிற்சி மைய சிறப்பு அலுவலர் சுகுணா சுகிர்தா பாய், பாரீஸ் செவ்த் 11 பல்கலைக் கழகத்தின் விஞ்ஞான பிரிவினர், ஒருங்கிணைப்பாளர் சில்வி சலாமுத்து, புதுச்சேரி அறிவியல் இயக்க தலைவர் மதிவாணன், அறிவியல் உருவாக்குவோம் சர்வதேச செயல் திட்டப்போட்டி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த ராஜா, அறிவியல் இயக்க துணைத் தலைவர் ஹேமாவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.