தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சியாளர்களுக்கு உரிய உதவித்தொகை வழங்க புதுச்சேரி அரசு உத்தரவு


புதுச்சேரி: இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரிக்கு இணையாக புதுச்சேரியிலுள்ள அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் முதுநிலை மற்றும் எம்பிபிஎஸ் பயிற்சியாளர்களுக்கு உதவித்தொகை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பு செயலர் முருகேசன் அனைத்து மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பிய உத்தரவு: 'முதுகலை மருத்துவக்கல்வி ஒழுங்குமுறை விதியின் கீழ் புதுச்சேரியிலுள்ள மருத்துவ மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு உதவித்தொகை வழங்குவது தொடர்பாக துணைநிலை ஆளுநர் உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

தேசிய மருத்துவ ஆணைய விதிமுறைகளின்படி புதுச்சேரியின் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு இணையாக முதுகலை (மருத்துவ மற்றும் மருத்துவம் அல்லாத) மாணவர்கள் மற்றும் இளநிலை மருத்துவ படிப்பான எம்பிபிஎஸ் பயிற்சியாளர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும்.

முதுகலை உதவித்தொகை முதலாண்டு ரூ.43 ஆயிரமும், 2ம் ஆண்டு ரூ.45 ஆயிரமும், 3ம் ஆண்டு ரூ.47 ஆயிரமும் தர வேண்டும். இளநிலை மருத்துவ பயிற்சியாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் தரவேண்டும்.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுக்க மருத்துவம் படிப்போருக்கு சமமான, சரியான நேரத்தில் உதவித்தொகை தரவேண்டும். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும். உதவித்தொகை மாதம் தோறும் தருவது தொடர்பான விவரங்களை காலாண்டுக்கு ஒரு முறை சுகாதாரத்துறை இயக்குநருக்கு அறிக்கையாக தரவேண்டும்.

உதவித்தொகையை மருத்துவ மாணவர்களின் வங்கி கணக்குக்கு நேரடி பண பரிமாற்றம் முறை மூலம் மாதந்தோறும் தரவேண்டும். இதை அந்தந்த நிறுவனங்கள் முறையாகத் தராவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதில் மாணவர்களுக்கு ஏதும் குறைபாடி இருந்தால் அவர்கள் சுகாதாரத்துறை இயக்குநருக்கு மின்னஞ்சலில் (dms.pon@nic.in) புகார் எழுதலாம். 2023-24 கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வரும் இந்த உத்தரவானது மறு அறிவிப்பு வரும் வரை அமலில் இருக்கும்.' இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.