உலகளவில் ஆராய்ச்சிகளின் மையமாக இந்தியா மாறுகிறது: கடல்சார் தொழில்நுட்ப நிறுவன இயக்குநர் தகவல்


வேலூர்: உலகளவில் ஆராய்ச்சிகளின் மையமாக இந்தியா மாறி வருகிறது என்று திருவள்ளுவர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தேசிய கடல்சார் தொழில்நுட் நிறுவன இயக்குநர் ஜி.ஏ.ராமதாஸ் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா இன்று (27-ம் தேதி) நடைபெற்றது. இதற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். பல்கலைக்கழக துணை வேந்தர் ஆறுமுகம் வரவேற்றார். சென்னையில் உள்ள தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் ஜி.ஏ.ராமதாஸ், சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

முன்னதாக தேசிய கடல்சார் தொழில் நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் ஜி.ஏ.ராமதாஸ் பேசியதாவது, "புகழ்பெற்ற புலவர் திருவள்ளுவர் பெயரில் இயங்கி வரும் இந்த பல்கலைக்கழகம் சிறப்புக்குரியது. மனித இனத்துக்கு தேவையான பல்வேறு கருத்துகளை திருவள்ளுவர் கூறியுள்ளார். அவர், கல்வியை பற்றி கூறும்போது, 'கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக' என்றார். நீங்கள் கற்றவற்றுக்கு ஏற்ப செயல்பட வேண்டும். இங்கு, உங்களுக்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. உங்கள் இதயம் முழுவதும் கனவுகளால் நிறைந்துள்ளது.

இந்தியாவில் உள்ள ஆயிரத்துக்கும் அதிகமான பல்கலைக் கழகங்களில் இருந்து ஆண்டுக்கு 25 லட்சம் மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர். இந்த எண்ணிக்கை சீனா 1.2 கோடியாக இருப்பதால் குறைவு. இந்திய மக்கள் தொகையில் 10% அதிகமானவர்கள்தான் உயர்கல்வி படிக்கும் வாய்ப்பு பெறுகின்றனர். இந்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்வி கொள்கை பாடத்திட்டத்தில் ஆராய்ச்சி, தொழில்நுட்ப வாய்ப்புகளுடன் சர்வதேச வாய்ப்புகளுடன் இணைந்து செயல்படும் வகையில் உள்ளது. முன்பெல்லாம் வாய்ப்புகள் அதிகம் நிறைந்த நாடு என அமெரிக்காவை கூறுவார்கள்.

தற்போது அது இந்தியாவுக்கு மாறியுள்ளது. இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கவும் நிதியுதவி அளிப்பதும் அதிகரித்து வருகிறது. இதன்மூலம், உலக அளவில் புதிய கண்டுபிடிப்புகள், வியாபாரங்களின் மையமாக இந்தியா மாறியுள்ளது. பாலின பாகுபாடு, சமுதாய மாகுபாடுகளுக்கு இடையிலான கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. இங்கு, வளத்தை பகிர்ந்தளிப்பதில்லை. மாறாக வாய்ப்புகள் பகிர்ந்தளிக்கப்படுகிறது. இது நமக்கான நேரம். நமது நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்கள் சர்வதேச அளவில் சிறப்பாக செயல்படுகின்றன.

பல ஐஐடிகள் வெளிநாடுகளில் தங்களது வளாகங்களை திறந்து வருகின்றன. உலகளவில் ஆராய்ச்சிகளின் மையமாக இந்தியா மாறி வருகிறது. பட்ஜெட்டில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு அதிகப்படியான நிதியை மத்திய அரசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில், முன்னுரிமைகள் பல வழங்கப்பட வேண்டியுள்ளது. திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ஆராய்ச்சி இதழ்கள் வெளியிடுவதிலும், ஆராய்ச்சிக்கான நிதியுதவியை பெறுவதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாணவர்களாகிய உங்களது வெற்றிக்குப் பின்னால் உங்களது பெற்றோர், ஆசிரியர்களின் தியாகங்கள் இருப்பதை மறந்துவிட வேண்டாம். இந்த நாடு உங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறது" என ஜி.ஏ.ராமதாஸ் கூறினார்.

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழாவில் 37,886 இளங்கலை, 5,268 முதுகலை, 111 எம்.ஃபில் மாணவ, மாணவிகள் என மொத்தம் 43,735 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றுள்ளனர். இதில், 249 முனைவர் பட்டம் மற்றும் முதல் மதிப்பெண் பெற்ற 42 இளங்கலை, 34 முதுகலை பாடப்பிரிவு மாணவர்களுக்கு பரிசுகளுடன் பட்டங்கள் வழங்கப்பட்டன. பட்டமளிப்பு விழாவில், பல்கலைக்கழக பதிவாளர் செந்தில் வேல் முருகன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பாபு ஜனார்தனம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.