சென்னை: தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்களில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தவர்கள் இல்லாத நிலையில், இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது குறித்து பள்ளிக் கல்வித்துறை பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு ஜூலை 1 முதல் 31-ம் தேதி வரை பல்வேறு சுற்றுகளாக கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இந்தநிலையில், தகுதியான இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கும் வகையில் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: ''பொதுவாக தொடக்கக் கல்வித் துறையில், மாநில முன்னுரிமை அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும்போது, ஒன்றியத்தில் காலிப் பணியிடம் இருக்கும் சூழலில் அதே ஒன்றியத்தில் இருப்பவர்கள் முன்னுரிமை பட்டியலில் இருந்தால் முதலில் ஒன்றியத்துக்குள் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். தொடர்ந்து, மற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
இதனால் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடைத்தால் அவர்கள் அதனை வெளி மாவட்டங்களில் தான் பெற வேண்டியிருக்கும் என சிலர் கூறி வருவது இனி முடிவுக்கு வரும். மேலும், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களில் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் இல்லாவிட்டால் தகுதி வாய்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.'' இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதன் மூலம் அரசாணை 243-ல் இடைநிலை ஆசிரியர்களின் நலன் கருதி சில திருத்தங்களை மேற்கொள்ள வாய்ப்பிருப்பதாகத் தெரியவந்துள்ளது.