இமெயில், வாட்ஸ்அப்பில் இளைஞர்களுக்கு செல்லும் கமலின் வித்தியாசமாக அழைப்பிதழ்


அழைப்பிதழ்

நாளை மறுதினம் 24-ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற இருக்கும் கிராமசபை கூட்டங்களில் பங்கேற்க வித்தியாசமான முறையில் அழைப்பிதழ் தயார் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது திருச்சி மக்கள் நீதி மய்யம் கட்சி.

திருச்சி தெற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் அதன் மாவட்ட செயலாளர், வழக்கறிஞர் கிஷோர்குமார் கிராமசபை கூட்டங்களில் இளைஞர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி கிராம சபைக்கு வா தோழா என்ற தலைப்பிட்டு இந்த வித்தியாசமான அழைப்பிதழை வடிவமைத்து அதை அனைவருக்கும் அனுப்பி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவரிடம் பேசினேன், "தாய் தமிழக குடிகள் தங்கள் இல்ல விழாக்களுக்கு பத்திரிகை அடித்து, அதனுடன் வெற்றிலை பாக்கு, சுருள் வைத்து தங்களது சொந்த பந்தங்களை வரவேற்பார்கள். அதே முறையை பயன்படுத்தி அனைவரையும் இந்த கிராமசபை கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளோம்.

வழக்கறிஞர் கிஷோர் குமார்

கிராமங்களை மீட்டெடுப்பது தொடர்பாக மகாத்மா காந்தி கண்டெடுத்த கனவை நினைவாக்கும் வகையில் சம்பிரதாய சடங்காக தமிழகத்தில் நடந்து வந்த கிராமசபையை மீட்டெடுத்து மிகப்பெரிய சமூக புரட்சிக்கு வித்திட்டவர் "கிராமசபை நாயகன்" செவாலியர் கமல்ஹாசன்.

அவரின் நேர்மையை பின்பற்றும் அரசியல் மாணவர்களாகிய நாங்கள். வரும் 24.04.2022 அன்று நடக்கும் கிராமசபைக்கு தமிழக இளைஞர்களை கலந்துகொள்ள வலியுறுத்தி அழைப்பிதழை வடிவமைத்து, அதனை அனைத்து இளைஞர்களுக்கும் இமெயில் மற்றும் வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி உள்ளோம். இதன் மூலம் கிராமசபை கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் அதிலும் குறிப்பாக இளைஞர்கள் அதிகம் பங்கேற்க வேண்டும் என்ற எங்கள் எண்ணம் நிறைவேறும் என்று நம்புகிறோம்" என்றார்.

x