`திட்டங்களை விரைந்து முடிக்கவும்'- மத்திய அரசுக்கு எதிராக போராடிய பாமக


காட்பாடியில் நடைபெற்ற பாமக ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் கிடப்பில் உள்ள ரயில் திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும் என்று மத்திய அரசைக் வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் மத்திய அரசின் சார்பில் பல ரயில்வே திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இன்னமும் பணிகள் தொடங்கப்படாமலும், நடைமுறைப்படுத்தப்படாமலும் உள்ளன. அவற்றை விரைந்து முடிக்க வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் சார்பில் தொடர்ந்து மத்திய அரசுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு ரயில்வேயில் மிக மிக குறைவாகவே உள்ளது. இதற்கு தமிழகம் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மத்திய அரசை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்று வேலூர் மாவட்டம், காட்பாடி ரயில் நிலையத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் இளவழகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசு கிடப்பில் போடப்பட்டுள்ள தமிழகத்திற்கான ரயில் திட்டங்களான நகிரி- திண்டிவனம், ரயில் பாதை திட்டம் உள்ளிட்ட திட்டங்களை விரைந்து முடிக்க வலியுறுத்தியும், மாநில அரசு சார்பில் மத்திய அரசிற்கு ரயில் திட்டங்களை விரைந்து முடிக்கக் கோரி அழுத்தம் தர கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், மேற்கு மாவட்ட செயலாளர் குமார், மாவட்டத்தலைவர் வெங்கடேசன் உட்பட திரளான பாமகவினர் கலந்துகொண்டு தமிழக ரயில் திட்டங்களை விரைந்து செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி கோஷங்களை எழுப்பினார்கள். மத்திய பாஜக அரசுடன் தொடர்ந்து இணக்கமாக செயல்பட்டு வரும் பாமக திடீரென மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

படங்கள்: வி.எம்.மணிநாதன்

x